தூத்துக்குடியில் கொதிக்கும் அரிசி கஞ்சியை தலையில் ஊற்றும் வினோத திருவிழா... 'கள்ளவாண்ட சுவாமி' திருவிழாவில் குவிந்த பக்தர்கள்!

 
தூத்துக்குடி கள்ளவாண்ட சுவாமி திருவிழா கொதிக்கும் கஞ்சியை தலையில் ஊற்றும்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட தீராத்திகுளம் கிராமத்தில் உள்ள கள்ளவாண்ட சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் கொதிக்கும் அரிசிக் கஞ்சியை தலையில் ஊற்றிக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

ராமாயணத்தில் வாலியை ராமர் மறைந்திருந்து வதம் செய்த நிகழ்வு தூத்துக்குடி மாவட்டம் மணக்கரையில் நடந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வாலி கதறிய "கள்ள ஆண்டவனே" என்ற வார்த்தையே மருவி 'கள்ளவாண்ட சுவாமி' எனப் பெயர் பெற்றது.

கொதிக்கும் எண்ணெய்

வாலி வதம் திறந்தவெளியில் நடந்ததாகக் கருதப்படுவதால், இக்கோயில்களும் திறந்தவெளியிலேயே அமைந்துள்ளன. ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் மட்டுமே இவ்வழிபாட்டு முறை காணப்படுகிறது. நள்ளிரவு 12 மணிக்குக் கோயிலின் முன் 11 அடுப்புகளில் மண் பானைகள் வைக்கப்பட்டு, பனையோலைத் தீயில் பச்சரிசிக் கஞ்சி காய்ச்சப்பட்டது. நையாண்டி, உருமி மேளம் மற்றும் வில்லிசைப் பாடல்களுடன் சாமி கதை பாடப்பட, அருள் வந்து ஆடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அருள்முற்றிய நிலையில் இருந்த பக்தர்கள், தென்னம்பாளையை கொதிக்கும் அரிசிக் கஞ்சியில் முக்கி எடுத்துத் தங்களது தலையில் ஊற்றிக் கொண்டனர். பெண்களின் குலவைச் சத்தத்துடன் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இந்த நேர்த்திக்கடன் நிறைவேற்றப்பட்டது.