உரங்கள் விலை உயர்வு.. மூலப்பொருட்கள் தட்டுப்பாடால் விவசாயிகள் கடும் நெருக்கடி!

 
உரம் விவசாயி உரம் விவசாயி

மத்திய கிழக்கு (மேற்காசியா) நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, தமிழ்நாட்டில் ரசாயன உரங்களின் விலை திடீரெனக் கடுமையாக உயர்ந்துள்ளது. இது குறுவை சாகுபடிப் பணிகளுக்குத் தயாராகி வரும் விவசாயிகளுக்குப் பேரிடியாகவும், பெரும் நெருக்கடியாகவும் மாறியுள்ளது.

சர்வதேச அளவில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியிலான வணிகக் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இதனால் உலகளாவிய உர விநியோகச் சங்கிலியில்பெரிய முடக்கம் ஏற்பட்டுள்ளது. உரங்கள் தயாரிப்பதற்குத் தேவையான திரவ இயற்கை எரிவாயு, அமோனியா மற்றும் சல்பர் ஆகிய மூலப்பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் விண்ணைத் தொட்டுள்ளது.

இந்த மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக, இந்தியாவில் உள்ள இஃப்கோ உள்ளிட்ட முன்னணி உள்நாட்டு உர நிறுவனங்கள் தங்களது ஆலைகளில் உற்பத்தியைக் குறைத்துள்ளன. சில ஆலைகள் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தி சரிவு மற்றும் வெளிநாடுகளில் இருந்தான இறக்குமதி பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் முன்னணி உர நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் உரங்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

விவசாயம் விளைநிலம் பயிர் நெற்கதிர்

பொட்டாஷ் உரம் ஒரு மூட்டை ரூ.1,850-லிருந்து ரூ.2,250 ஆகவும், பாக்டம்பாஸ் ரூ.1,750-லிருந்து ரூ.2,150 ஆகவும், அம்மோனியம் சல்பேட் ரூ.1,200-லிருந்து ரூ.1,400 ஆகவும் உயர்ந்துள்ளது. சில காம்ப்ளக்ஸ் உரங்களின் விலை மூட்டைக்கு ரூ.650 வரை உயர்ந்துள்ளது. இவற்றுடன் சேர்த்து விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலையும் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது விவசாயிகளுக்குக் கூடுதல் சுமையைத் தந்துள்ளது.

மத்திய அரசு தற்போது யூரியா மற்றும் சில குறிப்பிட்ட பாஸ்பேட் உரங்களுக்கு மட்டுமே மானியம் வழங்கும் கொள்கையைக் கடைப்பிடித்து வரும் சூழலில், விவசாயச் சங்கங்கள் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. "ஒருபுறம் உரங்களின் விலை தாறுமாறாக உயர்ந்தாலும், நாங்கள் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் நெல் மற்றும் இதர விளைபொருட்களுக்குக் கட்டுப்படியான கொள்முதல் விலை கிடைப்பதில்லை.

டிராக்டர் விவசாயம்

எனவே, இந்த உர விலை உயர்வை உடனடியாகக் கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட்டு மானியங்களை உயர்த்த வேண்டும். மேலும், மாநில அரசு உடனடியாக நெல், கரும்பு, காய்கறிகள், பழங்கள், மஞ்சள் மற்றும் கிழங்கு வகைகளுக்குக் கட்டுப்படியான கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும்."

இந்த உர விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு நீடித்தால், சாகுபடிப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு, எதிர்காலத்தில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.