சுதந்திர தின விழா கொண்டாட்டம்... சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்!
நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் இன்று காலை 6 மணி முதல் விழா முடியும் வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகரப் போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
காமராஜர் சாலை: உழைப்பாளர் சிலை முதல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையின் வடக்கு பகுதி வரை.
ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச் சாலை: பொதுமக்கள் மற்றும் சாதாரண வாகனப் போக்குவரத்திற்கு முழுமையாக மூடப்பட்டிருக்கும். உரிய அனுமதி அட்டைகள் வைத்துள்ள அதிகாரப்பூர்வ வாகனங்கள் மட்டுமே இந்த வழித்தடங்களில் அனுமதிக்கப்படும்.

காமராஜர் சாலையிலிருந்து பாரிமுனை செல்பவர்கள்: காமராஜர் சாலையிலிருந்து பாரிமுனை நோக்கிச் செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை சந்திப்பில் திருப்பி விடப்பட்டு, வாலாஜா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு மற்றும் என்.எஃப்.எஸ் சாலை வழியாகப் பாரிமுனையை அடையலாம்.
பாரிமுனையிலிருந்து காமராஜர் சாலை செல்பவர்கள்: பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாகக் காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள், பாரிமுனை சந்திப்பு, என்.எஃப்.எஸ் சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாகக் காமராஜர் சாலையை அடையலாம்.
அண்ணா சாலையிலிருந்து பாரிமுனை செல்பவர்கள்: அண்ணா சாலையிலிருந்து கொடிமரச் சாலை வழியாகப் பாரிமுனை செல்ல முயலும் வாகனங்கள், முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை மற்றும் என்.எஃப்.எஸ் சாலை வழியைப் பயன்படுத்தலாம்.

பாஸ் இல்லாத பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களின் வாகனங்கள் உழைப்பாளர் சிலை வரை மட்டுமே அனுமதிக்கப்படும். அங்கிருந்து வாலாஜா சாலை மற்றும் அண்ணா சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு, தீவுத்திடலின் 9-வது கேட் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுப் பூங்கா வளாகத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீவுத்திடல் பூங்கா நிரம்பும் பட்சத்தில், அண்ணா சாலையின் ஒரு பகுதி, ஓமந்தூரார் மருத்துவமனை வளாகம், சிவானந்தா சாலை, அண்ணா நீச்சல் குளம் மற்றும் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்களைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் வாகனங்கள் பி.டபிள்யூ.டி வளாகப் பகுதி மற்றும் கோட்டை வளாகத்தின் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த அனுமதிக்கப்படும்.
