இந்தியாவில் இங்கு மட்டும் நாளை ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினம் - நெகிழ வைக்கும் வரலாற்றுப் பின்னணி!

 
சுதந்திர குடியரசு தேசியக்கொடி கொடி

இன்று ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா முழுவதும் சுதந்திர தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடும் நிலையில், பீகார் மாநிலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 16-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படும் அபூர்வ வழக்கமும் வரலாற்று நெகிழ்ச்சியும் அரங்கேறி வருகிறது.

பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தில் அமைந்துள்ள டும்ரான் பகுதி மக்கள், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த பல தசாப்தங்களாக ஆகஸ்ட் 16-ம் தேதியைத் தங்களது சுதந்திர தினமாகக் கடைப்பிடித்து தேசியக் கொடியை ஏற்றி வருகிறார்கள்.

தேசியக் கொடியில் கொடி பூக்கள் சுதந்திர குடியரசு

1942 வெள்ளையனே வெளியேறு இயக்கம்: 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி, மகாத்மா காந்தியின் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் போது, டும்ரான் பகுதியைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் மற்றும் இளைஞர்கள் அம்மாநிலத்தில் உள்ள உள்ளூர் காவல் நிலையத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து, காவல் நிலையத்தின் உச்சியில் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றுவதே அவர்களின் முதன்மை நோக்கமாக இருந்தது.

அமைதியான முறையில் கொடியேற்றச் சென்ற பொதுமக்கள் மீது ஆங்கிலேயக் காவல் துறை சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 4 இளம் தியாகிகள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிர்த்தியாகம் செய்த அந்த 4 வீரர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், அவர்களின் தியாகத்தைக் கௌரவிக்கும் வகையிலும், டும்ரான் பகுதி மக்கள் ஆகஸ்ட் 15-ம் தேதியோடு நிறுத்திக் கொள்ளாமல், ஆகஸ்ட் 16-ம் தேதியையும் தங்களது உண்மையான சுதந்திர நாளாகக் கருதித் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.