நாளை இந்தியா ஏ–ஆஸ்திரேலியா ஏ 2-வது ஒருநாள் போட்டி ! வெற்றி பெறுமா ருதுராஜ் படை?

 
ஆஸ்திரேலியா

 

இந்தியா ஏ–ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டி நாளை (அக்டோபர் 9) நடைபெறுகிறது. புதுச்சேரியில் உள்ள கிரிக்கெட் அசோசியேஷன் புதுச்சேரி சீச்செம் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டி குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.

இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ அணி 48.2 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நாதன் மெக்ஸ்வீனி 135 பந்துகளில் 123 ரன்கள் விளாசினார்.

274 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்தியா ஏ அணிக்கு பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. இந்திய அணி 31.4 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா ஏ அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா ஏ அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. தொடரை சமன் செய்ய வேண்டுமெனில் நாளைய போட்டியில் இந்தியா ஏ அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்தியா ஏ அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ரஜத் படிதார், தேவ்தத் படிக்கல், பிரப்சிம்ரன் சிங் உள்ளிட்ட வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். மேலும், ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக விலகிய நிலையில் மும்பை ஆல்-ரவுண்டர் சூர்யன்ஷ் ஷெட்ஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா

இந்த நிலையில், முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்தியா ஏ அணி களமிறங்குகிறது. அதேசமயம், முதல் போட்டியில் பெற்ற வெற்றியை தொடரவும், தொடரை கைப்பற்றும் வாய்ப்பை வலுப்படுத்தவும் ஆஸ்திரேலியா ஏ அணி முயற்சிக்கும்.2-வது ஒருநாள் போட்டி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளதால், இரு அணிகளுக்கும் இடையிலான இந்த மோதல் கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.