பதிலடி கொடுக்குமா இந்தியா? ருதுராஜ் தலைமையில் ஆஸ்திரேலியாவுடன் 2-வது ஒருநாள் போட்டி தொடங்கியது!
இந்தியா ஏ–ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (அக். 9) புதுச்சேரியில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்தியா ஏ அணி களமிறங்குகிறது.ஆஸ்திரேலியா ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா ஏ அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ அணி 48.2 ஓவர்களில் 274 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் நாதன் மெக்ஸ்வீனி 135 பந்துகளில் 123 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய இந்தியா ஏ அணி 31.4 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா ஏ அணி பெரிய தோல்வியைச் சந்தித்தது.
இந்த நிலையில், 2-வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இந்தியா ஏ அணி முயற்சிக்கும். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான அணியில் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக, முதல் போட்டியில் ஏற்பட்ட பேட்டிங் சரிவைச் சரிசெய்வது இந்தியா ஏ அணிக்கு முக்கியமாக இருக்கும்.
மறுபுறம், முதல் ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் உற்சாகத்தில் உள்ள ஆஸ்திரேலியா ஏ அணி தொடரில் தனது முன்னிலையை அதிகரிக்க முயற்சிக்கும். இரு அணிகளும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் இந்தத் தொடர், அவர்களின் திறமையை மதிப்பிடுவதற்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.இந்தியா ஏ–ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு புதுச்சேரியில் உள்ள கிரிக்கெட் அசோசியேஷன் புதுச்சேரி சீசெம் மைதானத்தில் தொடங்கியது.
