நேரடியாக காலிறுதியில் களமிறங்கும் இந்தியா - பாகிஸ்தான்... ஆசிய விளையாட்டுப் போட்டியில் எகிறும் எதிர்பார்ப்பு!
ஜப்பானில் நடைபெறவுள்ள 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கிரிக்கெட் தொடரில், இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேரடியாகக் காலிறுதிச் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன.
ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் சேர்க்கப்பட்டுள்ள 43 விளையாட்டுப் பிரிவுகளில், டி20 வடிவிலான கிரிக்கெட் போட்டியும் ஒன்றாகும். ஆண்கள் கிரிக்கெட் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. சர்வதேச தரவரிசை மற்றும் முந்தைய சாதனைகளின் அடிப்படையில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் நேரடியாகக் காலிறுதிச் சுற்றில் மோதவுள்ளன.

மீதமுள்ள அணிகளான ஆப்கானிஸ்தான், ஜப்பான், நேபாளம் (பிரிவு ஏ) மற்றும் ஹாங்காங், மலேசியா, ஓமன் (பிரிவு பி) ஆகியவை லீக் சுற்றில் மோதும். இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். போட்டி அட்டவணையின்படி இந்திய அணி அரையிறுதியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள் கிரிக்கெட் தொடரில் மொத்தம் 8 அணிகள் களமிறங்குகின்றன. பெண்கள் பிரிவில் லீக் சுற்றுகள் ஏதும் இல்லாமல், நேரடியாக நாக்-அவுட் சுற்றுகளாகப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. நடப்பு சாம்பியனான இந்திய பெண்கள் அணி, தனது முதலாவது காலிறுதிப் போட்டியில் ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது.
