போர் பதற்றத்தால் இந்தியாவில் 4,335 விமானங்கள் ரத்து - மத்திய அமைச்சர் தகவல்!
மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் கடும் போர் பதற்றம் மற்றும் வான்வெளிப் பாதைகள் மூடப்பட்டதன் விளைவாக, இந்தியாவில் இதுவரை 4,335 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 6-வது நாளான இன்று மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ராம்மோகன் நாயுடு பின்வரும் முக்கியத் தகவல்களை வழங்கினார். வான்வெளிப் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய விமான நிறுவனங்கள் (Indian Carriers) இதுவரை 4,335 விமானங்களை ரத்து செய்துள்ளன. இதேபோல், வெளிநாட்டு விமான நிறுவனங்களின் 1,187 விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

"விமான இயக்கத்தில் பயணிகளின் பாதுகாப்பே எங்களது முதல் முன்னுரிமை. போர் பதற்றம் உள்ள பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டுள்ள போது, அங்கு விமானங்களை இயக்குவதில் அர்த்தமில்லை" என்று கூறினார். இத்தகைய சவாலான சூழலிலும், பாதுகாப்பான வான்வெளிப் பாதைகள் கிடைக்கும்போது சுமார் 2,19,780 பயணிகள் தங்களது பயணத்தை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ஆகியவை சர்வதேச வான்வெளி நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே வழக்கமான விமான சேவைகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் ரத்து செய்யப்படுவதால், விமானக் கட்டணம் கடுமையாக உயராமல் இருப்பதை உறுதி செய்ய அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை மாற்றிக்கொள்ள ஏதுவாக விமான நிறுவனங்கள் உரிய ஒத்துழைப்பை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
