2030 முதல் புதிய கார்களில் தானியங்கி பிரேக்கிங் கட்டாயம்? மத்திய அரசு திட்டம்
இந்தியாவில் சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், 2030-ம் ஆண்டு அக்டோபர் முதல் அனைத்து புதிய கார் மாடல்களிலும் மேம்பட்ட தானியங்கி அவசரகால பிரேக்கிங் அமைப்பைக் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கார் தானாக பிரேக் போடும் தொழில்நுட்பம்
இந்த அமைப்பு, காரின் முன்னால் உள்ள வாகனங்கள் அல்லது தடைகளைக் கண்டறிந்து, மோதல் அபாயம் ஏற்பட்டால் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுக்கும். ஓட்டுநர் உரிய நேரத்தில் செயல்படாவிட்டால், கார் தானாகவே பிரேக் போட்டு விபத்தைத் தவிர்க்க அல்லது பாதிப்பைக் குறைக்க உதவும். புதிய கார் மாடல்களுக்கு 2030 அக்டோபர் முதல் இந்த விதியை அமல்படுத்தவும், ஏற்கெனவே உற்பத்தியில் உள்ள மாடல்களுக்கு 2032 அக்டோபர் முதல் கட்டாயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
டாக்சி, கனரக வாகனங்களுக்கும் பாதுகாப்பு வசதிகள்
டாக்சிகளில் தூக்கக் கலக்கம் மற்றும் கவனக்குறைவைக் கண்டறியும் வசதி உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைக் கட்டாயமாக்கவும் பரிசீலிக்கப்படுகிறது. லாரி, பஸ்களில் தானியங்கி பிரேக்கிங், பிளைண்ட் ஸ்பாட் எச்சரிக்கை, பாதை மாறும்போது எச்சரிக்கும் அமைப்பு போன்ற வசதிகளைப் படிப்படியாக அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
