பதக்கப்பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா... ஆடவர் ஹாக்கியில் தங்கப்பதக்கம் - ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை!

 
இந்திய ஹாக்கி

ஜப்பானில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆக்கி இறுதிப்போட்டியில் மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மொத்த தங்கப் பதக்க எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது.

மலேசிய அணியுடன் நடைபெற்ற இறுதிப்போட்டியின் தொடக்கத்தில் இரு அணிகளும் தீவிர ஆட்டத்தை வெளிப்படுத்தின. இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றுத் தந்த நிலையில், மலேசியா உடனடியாகச் சமன் செய்தது.

ஹாக்கி

அதன்பிறகு சுதாரித்துக்கொண்டு ஆடிய இந்திய வீரர்கள் ஜக்ராஜ் சிங், ஹர்திக் சிங் மற்றும் பிற வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் அடுத்தடுத்து கோல்களை அடித்து ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டநேர முடிவில் 5-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை எளிதில் வீழ்த்தி இந்திய ஆடவர் ஆக்கி அணி தங்கப் பதக்கத்தைக் தனதாக்கியது.

இந்தத் தங்கப் பதக்கத்துடன் சேர்த்து, இந்தியா இதுவரை 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களைக் குவித்து, ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறிச் சாதனை படைத்துள்ளது.