ஐ.நா. சபைக்கு 5 மயில்களை பரிசாக வழங்கிய இந்தியா - 45 ஆண்டு கால பாரம்பரியம் புதுப்பிப்பு!
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஐரோப்பியத் தலைமையகத்திற்கு, அரிய வகை வெள்ளை ஆண் மயில் உட்பட 5 மயில்களை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது.
ஜெனீவாவிற்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி அரிந்தம் பாக்சி, ஐ.நா. சபையின் ஜெனீவா அலுவலக இயக்குநர் ஜெனரல் தாத்தியானா வலோவயாவிடம் இந்த 5 மயில்களையும் முறைப்படி ஒப்படைத்தார். பரிசளிக்கப்பட்ட ஐந்து மயில்களில் 4 நீல நிற மயில்களும், 1 அரிய வகை வெள்ளை நிற ஆண் மயிலும் அடங்கும். இவை ஐக்கிய நாடுகள் சபையின் நீலம் மற்றும் வெள்ளை நிறப் பிரதிபலிப்பாகவும் அமைந்துள்ளன.

ஜெனீவா ஐ.நா. வளாகத்தில் உள்ள புகழ்பெற்ற 46 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட 'அரியானா பூங்காவில்' மயில்களை வளர்க்கும் பாரம்பரியம் பல தசாப்தங்களாக உள்ளது. கடந்த 1981-ம் ஆண்டு அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, டெல்லி உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு ஜோடி மயில்களை ஐ.நா.வுக்கு வழங்கியிருந்தார். அதன்பின் 45 ஆண்டுகள் கழித்து, தற்போது மீண்டும் இந்தியா மயில்களை வழங்கி இந்த வரலாற்றுத் தொடர்பைப் புதுப்பித்துள்ளது.
ஜெனிவா பயோபார்க் பராமரிப்பு: இந்த மயில்களை ஐ.நா. ஊழியர்களுடன் இணைந்து ஜெனீவா பயோபார்க் (Geneva Bioparc) உயிரியல் பூங்கா நிர்வாகம் பராமரிக்கவுள்ளது. புதிய சூழலுக்குப் பழகும் வகையில் முதற்கட்டமாக 3 மாதங்களுக்குப் பாதுகாக்கப்பட்ட அடைப்பானில் வைக்கப்பட்டு, அதன் பின்னர் அரியானா பூங்கா வளாகத்திற்குள் சுதந்திரமாக உலா வர அனுமதிக்கப்படும்.
