இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் கையிருப்பு - அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு தகவல்!
இந்தியா தனது அணு ஆயுதக் களஞ்சியத்தைத் தொடர்ந்து நவீனமயமாக்கி வரும் நிலையில், தற்போது நாட்டின் கையிருப்பில் 190 அணு ஆயுதங்கள் உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வடகொரியா ஆகிய 9 நாடுகள் இணைந்து உலகம் முழுவதும் சுமார் 4,150 அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன. இதில் 93 சதவீதத்தை ரஷ்யாவும் அமெரிக்காவும் வைத்துள்ளன.
அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கட்டுரையின்படி, இந்தியாவிடம் தற்போது சுமார் 190 அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் உற்பத்தியில் உள்ள புதிய ஏவுகணைகளுக்கான 30 கூடுதல் ஆயுதங்களும் அடங்கும். பொதுத் தகவல்கள், அரசுத் தரவுகள் மற்றும் வணிகச் செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் சுமார் 730 கிலோ ஆயுத தரத்திலான புளூட்டோனியம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக நிபுணர்கள் குழு மதிப்பிட்டுள்ளது. ஒரு அணு ஆயுதம் தயாரிக்க 4 கிலோ புளூட்டோனியம் தேவைப்படும் நிலையில், இந்த இருப்பைக் கொண்டு 140 முதல் 225 வரையிலான அணு ஆயுத முனைகளைத் தயாரிக்க முடியும். இருப்பினும், முழுப் புளூட்டோனியத்தையும் ஆயுதத் தயாரிப்புக்கு இந்தியா பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
1998 பொக்ரான்-2 சோதனைக்குப் பிறகு, அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையை இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. எனினும், தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழி ஏவுதள அமைப்புகளுடன் புதிய ஆயுத அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்தியா தனது அணு ஆயுதத் திறனைத் தொடர்ந்து நவீனமயமாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
