“இந்தியா ஒருபோதும் தன்னை இந்து நாடாக அறிவிக்கவில்லை!” - உச்ச நீதிமன்ற நீதிபதி பெருமிதம்!
இந்தியாவை ஒருபோதும் இந்து நாடாக அறிவிக்கவில்லை என்றும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி இது அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய ஒரு தேசம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி என். கோடீஸ்வர் சிங் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் (NLIU) நடைபெற்ற மாணவர் சட்டப் பேரவை மாநாட்டில், உச்ச நீதிமன்ற நீதிபதி என். கோடீஸ்வர் சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். அப்போது இந்திய அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பின்மை குறித்து அவர் ஆற்றிய உரை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. "உலகில் பல நாடுகள் தங்களை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த நாடாக (எ.கா. இஸ்லாமிய நாடு அல்லது கிறித்தவ நாடு) அறிவித்துள்ளன. ஆனால், இந்தியா ஒருபோதும் தன்னை 'இந்து நாடாக' அறிவித்துக் கொள்ளவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மதங்களையும் சமமாகப் பாவிக்கிறது."

"வரலாற்று ரீதியாகப் பார்த்தால், 'இந்து' என்பது ஒரு மதத்தைக் குறிக்கும் சொல் அல்ல. சிந்து நதிக்கு அப்பால் வசிப்பவர்களைக் குறிக்க வெளிநாட்டவர்கள் பயன்படுத்திய ஒரு பெயரே 'இந்து'. இது ஒரு புவியியல் சார்ந்த அடையாளமே தவிர, தொடக்கத்தில் மத அடையாளம் அல்ல."
"அரசியலமைப்புச் சட்டமே நமது நாட்டின் உச்சபட்ச ஆவணம். ஒவ்வொரு குடிமகனும் தனக்குப் பிடித்தமான மதத்தைப் பின்பற்றவும், அதனைப் பரப்பவும் சட்டம் முழு உரிமை அளித்துள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே நமது ஜனநாயகத்தின் பலம்."

மேலும் அவர் பேசுகையில், இந்திய நீதிமன்றங்களில் இன்றும் பயன்படுத்தப்படும் லத்தீன் மொழிச் சொற்கள் மற்றும் சிக்கலான சட்டத் கலைச்சொற்கள் சாதாரண மக்களுக்குப் புரிவதில்லை என விமர்சித்தார். நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே சாமானிய மக்களுக்கு உண்மையான நீதியை வழங்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை எடுத்துக்கூறும் நீதிபதியின் இந்தப் பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
