“இந்தியா என்னைக் கெடுத்துவிட்டது”... ஜப்பான் திரும்பிய இளம்பெண் கண்ணீருடன் சொன்ன அதிர்ச்சி தகவல் - வைரலாகும் வீடியோ!

 
ஜப்பான்

இந்தியாவில் மும்பையில் வசித்து வந்த பிறகு தாயகம் திரும்பிய ஜப்பானியப் பெண் கன்டென்ட் கிரியேட்டர் ஹிகாரு, இந்தியாவில் கிடைத்த அன்றாட செயலி வசதிகளுக்குப் பழகிவிட்டதால், ஜப்பான் திரும்பிய பிறகு அன்றாட வாழ்க்கை சற்று சிரமமாக இருப்பதாக உணர்வதாகப் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகிப் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.

உணவு, மளிகைப் பொருட்கள் முதல் மருந்துகள், மருத்துவமனை முன்பதிவு மற்றும் துணி தைத்து பழுதுபார்த்தல் வரை அனைத்தையும் செயலிகள் மூலமே எளிதாகப் பெற்றுப் பழகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் @hikarusan.india என்ற பெயரில் இயங்கி வரும் ஹிகாரு, இந்தியாவில் வாழ்ந்த அனுபவம் தனது அன்றாட எதிர்பார்ப்புகளை எவ்வாறு மாற்றியது என்பது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியா என்னை ரொம்பவே கெடுத்துவிட்டது. நான் ஜப்பானுக்குத் திரும்பி வந்தபோது, என் வாழ்க்கை மிகவும் சிரமமாக மாறிவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்தபோது உணவு, மளிகைப் பொருட்கள் மற்றும் ஷாப்பிங் மட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமை வீடு சுத்தம் செய்தல், மருந்துகள் வாங்குவது, மருத்துவமனை முன்பதிவுகள், தனது வளர்ப்புப் பூனைக்கான கால்நடை மருத்துவமனை வருகைகள் மற்றும் துணி தைத்துக் கொடுப்பது, கிழிந்த ஆடைகளைத் தைப்பது உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்தையும் செயலிகள் மூலமே ஏற்பாடு செய்து கொண்டதால், தான் எதையும் அதிகம் சிரமப்பட்டுச் செய்ய வேண்டியதில்லை என அவர் பட்டியலிட்டுள்ளார். மேலும் வரும் டிசம்பர் மாதம் தான் மீண்டும் மும்பை திரும்பத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிகாருவின் இந்த வீடியோ சமூக வலைதளப் பயனர்களிடையே இருவேறு கருத்துகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் செயலி அடிப்படையிலான சேவைகள் வாழ்க்கையை மிக எளிதாக்குகின்றன என்பதைப் பலரும் ஒப்புக்கொண்ட நிலையில், சிலர் இந்த வசதிகளுக்குப் பின்னால் உள்ள உழைப்பு மற்றும் பொருளாதாரக் காரணிகளைச் சுட்டிக்காட்டினர். ஒரு பயனர், “மலிவான மற்றும் ஏராளமான உழைப்புக்குப் பழகுவதை நிறுத்துங்கள்” எனக் கருத்து பதிவிட்டிருந்தார்.

அந்த விமர்சனத்திற்குப் பதிலளித்த மற்றொரு பயனர், இத்தகைய சேவைத் துறைகளால் லட்சக்கணக்கானோருக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்பைச் சுட்டிக்காட்டி ஆதரவாகப் பேசினார். “அது பலருக்கும் ஒரு வாழ்வாதார மற்றும் வேலைவாய்ப்பு ஆதாரம்; இரு தரப்பினருக்கும் இது ஒரு பயனுள்ள நிலை. இல்லையென்றால் நீங்கள் அவர்களுக்கு வேலை கொடுப்பீர்களா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் விரைவான டெலிவரி மற்றும் உள்ளூர் சேவைத் தளங்களின் செயல்பாடு குறித்து இந்த வீடியோ சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.