"இந்திய நாடு உங்கள் தந்தையின் சொத்து கிடையாது Mr. மோடி!" - அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்குதல்!

 
அரவிந்த் கெஜ்ரிவால்

இந்திய நாடு உங்கள் தந்தையின் சொத்து அல்ல; மிரட்டுவதை நிறுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நீட் எதிர்ப்புப் பேரணியின் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை இலக்கு வைத்து அவர் இந்த அதிரடிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறையைக் கண்டித்துப் பேசிய கெஜ்ரிவால், மத்திய அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டினார்.

கெஜ்ரிவால்

"மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வினாத்தாள் கசிவைக் கூடத் தடுக்க முடியாத அளவுக்குக் கையாலாகாத அரசாகவே இந்த மத்திய அரசு இயங்கி வருகிறது" எனச் சாடினார். நீதிக்காக அமைதியான வழியில் போராடத் தெருவில் இறங்கிய சொந்த நாட்டு மக்கள் மற்றும் மாணவர்கள் மீது காவல்துறையை ஏவித் தாக்குதல் நடத்துவது மிகவும் வெட்கக்கேடான செயலாகும் என்றும் அவர் வேதனை தெரிவித்தார். மத்திய அரசின் அடக்குமுறைப் போக்கைச் கடுமையாகச் சாடிய கெஜ்ரிவால், பிரதமர் மோடி மீதான விமர்சனத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றார்.

"நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிப்பதும், அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதும்தான் மிகப்பெரிய தேசவிரோதச் செயல். அந்த வகையில் நாட்டின் மிகப்பெரிய தேசவிரோதியே பிரதமர் மோடிதான்" என அவர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அதிரடி மற்றும் காட்டமான பேச்சு தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.