தமிழகத்தில் 4 நாட்களுக்குக் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

 
இன்று வடகிழக்கு பருவமழை  தொடக்கம்!      நம்ம மாவட்டத்திற்கு கனமழை !

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதை அடுத்து, வரும் 26-ஆம் தேதி முதல் 4 நாட்களுக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலச் சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மழை

ஜூன் 26 முதல் ஜூன் 29 வரையிலான நான்கு நாட்களுக்குத் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பருவமழை தீவிரம் அடையவுள்ளது. இதன்படி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, விருதுநகர் ஆகிய தென் தமிழக மாவட்டங்களிலும், குறிப்பிட்ட தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் சற்றுக் குறைந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியுள்ளது.