பாலஸ்தீன அகதிகளின் நலனுக்காக ரூ.23 கோடி நிதியுதவி வழங்கியது இந்தியா!
பாலஸ்தீன அகதிகளின் நலன் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ. முகமைக்கு இந்தியா 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.23 கோடி) நிதியுதவியை வழங்கியுள்ளது. 2026–27 நிதியாண்டிற்கான இந்தியாவின் வருடாந்திர நிதியுதவி உறுதிமொழியான 5 மில்லியன் டாலரின் (சுமார் ரூ.46 கோடி) ஒரு பகுதியாக இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் ராமல்லா நகரில் நடைபெற்ற நிகழ்வில், பாலஸ்தீனத்திற்கான இந்தியப் பிரதிநிதி மகிமா சிகந்த், யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ. அமைப்பின் மூத்த நிதி உதவியாளர் கலீத் ஹிந்தெய்யாவிடம் இந்த 2.5 மில்லியன் டாலர் நிதியுதவியை அதிகாரப்பூர்வமாக வழங்கினார்.

1949-ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையால் உருவாக்கப்பட்ட யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ. முகமை, ஜோர்டான், லெபனான், சிரியா, காசா பகுதி மற்றும் கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட மேற்குக் கரை ஆகிய 5 பகுதிகளில் வசிக்கும் பதிவு செய்யப்பட்ட பாலஸ்தீன அகதிகளுக்கு உதவி மற்றும் பாதுகாப்பு வழங்கி வருகிறது. இந்த நிதியுதவி அகதிகளின் கல்வி, சுகாதார சேவைகள், அத்தியாவசிய மருந்துகள் விநியோகம் மற்றும் அவசர மனிதாபிமான நிவாரணப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவின் இந்த நிதியுதவிக்கு நன்றி தெரிவித்துள்ள யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ. அதிகாரி கலீத் ஹிந்தெய்யா, பாலஸ்தீன அகதிகளின் நலனுக்காக இந்தியா தொடர்ந்து அளித்து வரும் நீண்டகால நிதி மற்றும் அரசியல் ஆதரவைப் பாராட்டினார்.

இதேபோல், புதுடெல்லியில் உள்ள பாலஸ்தீனத் தூதர் அப்துல்லா எம். அபு ஷாவேஷ், “மிகவும் இக்கட்டான மற்றும் முக்கியமான காலகட்டத்தில் இந்தியா வழங்கியுள்ள இந்த 2.5 மில்லியன் டாலர் நிதியுதவி, பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா அளித்து வரும் உறுதியான அரசியல் மற்றும் மனிதாபிமான ஆதரவை மீண்டும் நிரூபித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீன மக்களின் உரிமைகள் தொடர்பான தீர்மானங்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருவதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
