2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா செயல்திட்டம் சமர்ப்பிப்பு... சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் விண்ணப்பம்!

 
ஒலிம்பிக்

2036-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான தொலைநோக்குப் பார்வை மற்றும் விரிவான செயல்திட்டத்தைச் சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் இந்தியா சமர்ப்பித்துள்ளது. 2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்தவுள்ள அகமதாபாத் நகரின் உலகத்தர விளையாட்டு அரங்குகள், நவீன உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மத்திய - மாநில அரசுகளின் முழுமையான ஆதரவு ஆகியவை இந்தச் செயல்திட்டத்தில் விரிவாக இடம்பெற்றுள்ளன.

2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த தயாராகி வரும் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் உலகத்தர விளையாட்டு அரங்குகள், வீரர்கள் தங்கும் கிராமம், போக்குவரத்து மற்றும் நவீன உட்கட்டமைப்பு வசதிகள் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்

ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதற்கான மத்திய அரசு மற்றும் மாநில அரசின் முழுமையான கொள்கை ரீதியான ஆதரவு, நிதி ஒதுக்கீடு மற்றும் நீண்டகால விளையாட்டு மேம்பாட்டுத் தொலைநோக்குப் பார்வை ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பைப் பெறுவதற்காக இந்தியாவுடன் சேர்த்து மொத்தம் 7 நாடுகள் களத்தில் உள்ளன.  இந்தியா, ஜெர்மனி, ஹங்கேரி, கத்தார், தென் கொரியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையே போட்டி உள்ளது.

ஒலிம்பிக்

ஏற்கெனவே 2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் உரிமையைப் பெற்றுள்ள இந்தியா, தற்போது 2036 ஒலிம்பிக் போட்டிகளையும் நடத்தத் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவது இந்திய விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்குப் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.