2029-க்குள் இந்தியாவில் 4 விண்வெளி ஏவுதளங்கள் செயல்பாட்டுக்கு வரும் - இஸ்ரோ தலைவர் நாராயணன்

 
 இஸ்ரோ தலைவர் நாராயணன்

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளையும் வணிக ரீதியான செயற்கைக்கோள் ஏவுதல் திறனையும் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், 2029-ஆம் ஆண்டிற்குள் நாட்டில் மொத்தம் 4 ஏவுதளங்கள் செயல்பாட்டிற்கு வரும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்  தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் சிறிய செயற்கைக்கோள் ஏவுகலன்களுக்கான பிரத்யேக வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த வளாகத்தில் செயற்கைக்கோள்களை ஒருங்கிணைக்கும் கட்டடங்கள், ஏவுதளங்கள், இரயில் பாதை அமைப்புகள், தொலைஅளவியல் வசதிகள் மற்றும் அதிநவீன கண்காணிப்பு-கட்டுப்பாட்டு மையங்கள் இடம்பெறவுள்ளன.

இஸ்ரோ

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தின் முதற்கட்ட ஆளில்லா விண்கலச் சோதனை அடுத்த 2 மாதங்களுக்குள் நடத்தப்படவுள்ளது. தொடர்ந்து மேலும் 2 ஆளில்லா சோதனைகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்திற்காக இதுவரை 8,000 தரைநிலைச் சோதனைகள் நிறைவடைந்துள்ளன.

ஜப்பான் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து சந்திரயான்-5 திட்டம் செயல்படுத்தப்படும். இதில் 350 கிலோ எடைகொண்ட ரோவர் நிலவில் தரையிறக்கப்பட்டு, 100 நாட்கள் ஆய்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இஸ்ரோ

விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டாலும், இஸ்ரோ ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என்று அவர் தெளிவுபடுத்தினார். புத்தொழில்  நிறுவனங்களுக்குத் தொழில்நுட்ப உதவி வழங்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் உயர்த்துவதே இதன் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.