33 மணி நேர பயணம் 12 மணி நேரமானது! இந்தியாவில் மாறிய பயண நேரம்... வந்தே பாரத் முதல் எக்ஸ்பிரஸ்வே வரை
இந்தியாவில் புதிய எக்ஸ்பிரஸ்வேக்கள், பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் அதிவேக ரயில் சேவைகள் காரணமாக பல முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் கணிசமாக குறைந்துள்ளது.மத்திய அரசின் சமீபத்திய தகவல்களை தொகுத்து வெளியிடப்பட்டுள்ள விவரங்களின்படி, நீண்ட தூர பயணங்களில் முன்பு ஏற்பட்ட சுற்றுப்பாதைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றுக்கு மாற்றாக புதிய நேரடி இணைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பின்னர், இரு நகரங்களுக்கு இடையிலான சாலைப் பயண நேரம் சுமார் 33 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக குறையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா எக்ஸ்பிரஸ்வேயின் முதல் கட்டப் பணிகளால் டெல்லி-அமிர்தசரஸ் பயணம் 8 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாகவும், டெல்லி-கத்ரா பயணம் 14 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாகவும் குறைந்துள்ளது.டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ்வே மூலம் இரு நகரங்களுக்கு இடையிலான பயணம் சுமார் 2½ மணி நேரத்தில் இருந்து 50 நிமிடங்களாக குறைந்துள்ளது. பெங்களூரு-மைசூரு இடையிலான பயண நேரமும் சுமார் 3 மணி நேரத்தில் இருந்து 75 நிமிடங்களாக குறைந்துள்ளது. டெல்லி-டேராடூன் பொருளாதார வழித்தடம் பயண நேரத்தை 6 மணி நேரத்துக்கும் அதிகமான நிலையில் இருந்து சுமார் 2½ மணி நேரமாக குறைத்துள்ளது.
பாலங்கள் அமைக்கப்பட்டதன் மூலமும் பல இடங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. அசாம்-அருணாசல பிரதேசத்தை இணைக்கும் போகிபீல் பாலம் மூலம் முன்பு கிட்டத்தட்ட ஒரு நாள் எடுத்த பயணம் தற்போது சுமார் 1 முதல் 2 மணி நேரமாக குறைந்துள்ளது. அட்டல் சேது மூலம் மும்பை-நவி மும்பை பயணம் சுமார் 2 மணி நேரத்தில் இருந்து 20 நிமிடங்களாக குறைந்துள்ளது.பீகாரில் கோசி ரயில் மகாசேது அமைக்கப்பட்ட பிறகு நிர்மலி-சரைகர் இடையிலான ரயில் பயணம் 8 மணி நேரத்தில் இருந்து வெறும் 30 நிமிடங்களாக குறைந்துள்ளது. ரயில் பாதையின் தூரமும் சுமார் 300 கி.மீ.யில் இருந்து 22 கி.மீ.யாக குறைந்துள்ளது.
மலைப்பகுதிகளில் சுரங்கப்பாதைகளும் பயண நேரத்தை குறைத்துள்ளன. 9.02 கி.மீ. நீளமுள்ள அடல் சுரங்கப்பாதை ரோத்தங் கணவாயைத் தவிர்த்து மணாலி-சர்ச்சு வழித்தடத்தில் சுமார் 46 கி.மீ. தூரத்தையும் 4 முதல் 5 மணி நேர பயண நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது.ரயில் சேவையிலும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டுக்கான ரயில்வே கால அட்டவணையில் 549 ரயில்களின் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 ரயில்கள் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமான நேர சேமிப்பையும், 48 ரயில்கள் 31 முதல் 59 நிமிடங்கள் வரையிலான நேர சேமிப்பையும் பெற்றுள்ளன.
வந்தே பாரத் ரயில்களும் பயண நேரத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. டெல்லி-வாரணாசி வந்தே பாரத் சேவை முந்தைய ரயில் சேவைகளைவிட சுமார் 40 முதல் 50 சதவீதம் வேகமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கத்ரா-ஸ்ரீநகர், பனாரஸ்-கஜுராஹோ, எர்ணாகுளம்-பெங்களூரு உள்ளிட்ட வழித்தடங்களிலும் பயண நேரம் குறைந்துள்ளது.
இதற்கிடையில், மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்தால், 508 கி.மீ. தூரத்தை சுமார் 1 மணி 58 நிமிடங்களில் கடக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் தானே க்ரீக் பகுதியில் சுமார் 7 கி.மீ. நீளமுள்ள கடலுக்கடிப் பகுதி ரயில் சுரங்கப்பாதையும் இடம்பெறுகிறது.புதிய சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் நவீன ரயில் சேவைகள் மூலம் இந்தியாவின் பல பகுதிகளுக்கு இடையிலான பயண நேரம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
