உலகமே எதிர்பார்க்கும் நாள்.. இறுதி கட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள்..!!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும், 2 முறை சாம்பியனான இந்தியாவும் மோதும் இந்த இறுதி ஆட்டம் உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளிக்கப் போகிறது. ஏற்கெனவே இதே உலகக் கோப்பை போட்டியில் 2003-ஆம் ஆண்டு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியனானது. தற்போது மீண்டும் இதே கட்டத்தில் இரு அணிகளும் சந்திக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் திறனுடன் இந்தியா இருக்கிறது என்றால், அது மிகையாகாது. நடப்பாண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆஸ்திரேலியாவிடம் இழந்ததற்கும் பதில் தருவதாக இருக்கும்.
கடைசியாக 2013-இல் சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்தியாவுக்கு, கடந்த 10 ஆண்டுகளாகவே ஐசிசி போட்டிகளில் கோப்பை என்பது கனவாகவே தொடர்ந்து வருகிறது. இந்த உலகக் கோப்பை போட்டியில் அந்தக் கனவை நனவாக்கும் அனைத்து சாத்தியக்கூறுகளுடனும் இந்தியா இருக்கிறது.
பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தும் இந்தியா, நடப்பு தொடரில் தோல்வியே காணாத ஒரே அணியாக 10 தொடர் வெற்றிகளுடன் இறுதி ஆட்டத்துக்கு வந்திருக்கிறது. முதல் பேட்டிங், சேஸிங் என இரண்டு சவாலையுமே சரியாக எதிர்கொண்டு இந்தக் கட்டத்துக்கு வந்துள்ளது. அணியை பொருத்தவரையில், பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி நல்லதொரு தொடக்கத்தை அளிக்கிறார். இது, மிடில் ஆர்டரில் விராட் கோலி உள்ளிட்டோர் நிதானமாக ஆடி ரன்கள் சேர்ப்பதற்கு சாதகமாக அமைகிறது. புதிய உலக சாதனையுடனும், பழை ஃபார்முடனும் இருக்கும் கோலி, அணிக்கு பலம். நடப்பு தொடரில் தற்போது அதிக ரன்கள் (711) அடித்தவராக முன்னிலையில் இருக்கிறார்.
ஷுப்மன் கில்லும் ரன்கள் சேர்க்க முயற்சித்து வரும் நிலையில், ஷ்ரேயஸ் ஐயர் ஒரு சதத்துடன் நம்பிக்கை அளிக்கிறார். நிதானமான ஆட்டத்தால் கே.எல்.ராகுலும், மிடில் லோயர் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவும் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். போட்டியின் பாதி கட்டத்திலிருந்து இணைந்த முகமது ஷமி, அதன் பிறகு அணியின் வெற்றிகளில் தன்னை தவிர்க்க முடியாதவராக இருத்திக் கொண்டார். தற்போது தொடரில் அதிக விக்கெட்டுகள் (23) சாய்த்தவராக எதிரணி பேட்டர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். அவருக்குத் துணையாக ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் உள்ளனர். தற்போதைய அணியில் கோலி, அஸ்வின் (ஒருநாள் கிரிக்கெட்), கேப்டன் ரோஹித் (டி20) ஆகியோர் மட்டுமே உலகக் கோப்பை வெற்றித் தருணத்தை ருசித்த அனுபவம் கொண்டவர்களாவர்.சொந்த மண்ணில் லட்சக் கணக்காண ரசிகர்கள் முன்னிலையில் ஆடுவது எந்த அளவு ஆதரவாக இருக்குமோ, அதே அளவு நெருக்கடியும் இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
ஆஸ்திரேலிய அணியை பொருத்தவரை, 2 தொடர் தோல்விகளுடன் போட்டியை தொடங்கியபோதும், பின்னர் 8 தொடர் வெற்றிகளுடன் தன்னை வழக்கமான பாதைக்கு மீட்டுக் கொண்டது. இதுபோன்ற நெருக்கடியான தருணங்களில் இருந்து மீள்வதால் தான் 5 முறை சாம்பியனாக இருக்கிறோம் என பேட்டர் மார்னஸ் லபுஷேன் கூறியிருக்கிறார். பொதுவாகவே இந்திய அணிக்கு நெருக்கடி அளிப்பதாக ஆஸ்திரேலியா இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
நடப்பு தொடரில் இரட்டைச் சதம் விளாசிய ஒரே வீரரான கிளென் மேக்ஸ்வெல், சதமடித்த டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்டிங்கில் பலம் காட்டுகின்றனர். ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ் தடுமாற்றமாக இருக்கின்றனர். பௌலிங்கில் ஆடம் ஸாம்பா விக்கெட்டுகள் சரிப்பதில் முன்னோடியாக இருக்கிறார். கேப்டன் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் எதிரணி பேட்டர்களுக்கு சவால் அளிக்கின்றனர்.
பிரதானம்: இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா - மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸில்வுட், முகமது ஷமி - இடது கை ஓபனர்கள், விராட் கோலி ஆடம் ஸாம்பா, குல்தீப் யாதவ் - கிளென் மேக்ஸ்வெல், டேவிட் வார்னர் - ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரிடையேயான மோதல் விறுவிறுப்பானதாக இருக்கும்.