காது கேளாதோருக்கான ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியா!
Nov 23, 2025, 13:30 IST
ஜப்பான் தலைநகர் டோத்தியோவில் நடைபெற்று வரும் காது கேளாதோருக்கான 25வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பொற்கொடி நாட்டும் சாதனையை எழுதியுள்ளது. பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை துப்பாக்கி சுடுதல் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை மஹித் சந்து அசத்தலாகப் பங்கேற்று 456 புள்ளிகள் குவித்து தங்கத்தை பிடித்தார். துல்லியமும் தன்னம்பிக்கையும் இணைந்த அவரது விளையாட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
முன்னதாக தகுதி சுற்றிலேயே மஹித் சந்து புதிய வரலாறு படைத்தார். 585 புள்ளிகள் குவித்து தனது சொந்த உலக சாதனையை முறியடித்த அவர், சர்வதேச தரத்தில் இந்தியாவுக்கு மறக்க முடியாத பெருமையை சேர்த்தார். துல்லிய துப்பாக்கி சுடுதலின் ஒவ்வொரு நிலையிலும் அவர் காட்டிய நிலைத்தன்மை இறுதியில் அவரது வெற்றிக்குக் காரணமானது.

இந்நிகழ்ச்சியில் இது மஹித் சந்துவின் இரண்டாவது தங்கம் என்பதுதான் மேலும் பெருமை. தொடரின் நட்சத்திரமாக உருவெடுத்துள்ள அவர், இந்திய விளையாட்டு வரலாற்றில் புதிய பொற்காலத்தை தொடங்கியுள்ளார்.
