இமாச்சல பிரதேச கார் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் 3 பேர் பலி!
இமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள பனி படர்ந்த மலைப்பகுதியில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடந்த 29-ந்தேதி இரவு நடந்த இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக அடுத்த நாள் காலையிலேயே மீட்புக் குழுவினரால் உடல்களை மீட்க முடிந்தது. உயிரிழந்தவர்களில் 3 பேர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விபத்தில் பலியானவர்கள் பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் வசித்த கார்த்திகேயன் (48), அவரது மனைவி மணிமாலா (42) மற்றும் 13 வயது மகன் நந்தன் என்பது தெரியவந்துள்ளது. மணிமாலாவின் சொந்த ஊர் திருப்பூர் செங்குந்தாபுரம் ஆகும், கார்த்திகேயன் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவுக்குக் குடிபெயர்ந்து அங்குள்ள பள்ளிகளுக்கு உணவு தயாரித்து வழங்கும் தொழில் செய்து வந்தனர்.
இவர்களின் மகன் நந்தன் ஒரு சிறந்த தற்காப்புக் கலை வீரர் ஆவார். இமாசல பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான தற்காப்புக் கலைப் போட்டியில் நந்தன் பங்கேற்பதற்காகத் தனது பெற்றோருடன் சென்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கச் சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் திருப்பூரிலும் ஈரோட்டிலும் உள்ள அவர்களது சொந்த ஊர்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
