இந்தியா புதிய வரலாற்றுச் சாதனை... உலகக்கோப்பை வில்வித்தையில் இரட்டை தங்கம் வென்ற தீரஜ்-கும்கும் ஜோடி !
துருக்கியின் அந்தல்யா நகரில் நடைபெற்ற உலகக்கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 3 போட்டிகளில் இந்திய வீரர்கள் தங்களின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் இந்தியாவின் நட்சத்திர வீரரான 24 வயது தீரஜ் பொம்மதேவரா ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். உலகக்கோப்பை வில்வித்தையின் ஒற்றையர் பிரிவில் அவர் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் தென் கொரியாவின் ஒலிம்பிக் பதக்க வீரரான லீ வூ சீக்கை தீரஜ் எதிர்கொண்டார். ஆட்டம் தொடங்கியதில் இருந்தே அம்பு எய்வதில் தனது அபார திறமையை வெளிப்படுத்திய அவர் 7-3 என்ற கணக்கில் கொரிய வீரரை முழுமையாக வீழ்த்தினார். இந்த இமாலய வெற்றிக்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் அவர் இந்தியாவின் மற்றொரு இளம் வீராங்கனையான கும் கும் மொஹோடுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவிலும் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியிருந்தார்.
ஒரே நாளில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று இரட்டை தங்கம் என்ற புதிய சாதனையை நிகழ்த்திய தீரஜுக்கு தற்பொழுது விளையாட்டு உலகிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கடந்த 2021-ம் ஆண்டுக்குப் பிறகு உலகக்கோப்பை ஒற்றையர் பிரிவில் தங்கம் வெல்லும் முதல் இந்திய ஆடவர் வில்வித்தை வீரர் என்ற பெருமையையும் அவர் தற்பொழுது பெற்றுள்ளார். இந்த அரிய சாதனை மூலம் உலக வில்வித்தை தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் தீரஜ் ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கும் மிகப்பெரிய பெருமையைத் தேடித்தந்துள்ளார்.
