இந்திய எல்லையில் அத்துமீறி ஊடுருவல்... பாகிஸ்தானியரை ரகசிய இடத்தில் விசாரணை!

 
பாகிஸ்தான்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவத்தினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தார் உட்பிரிவின் பாலகோட் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் வழக்கம்போல் தங்களது ரோந்துப் பணியை மேற்கொண்டனர். அப்போது அண்டை நாடான பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் இருந்து மர்ம நபர் ஒருவர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து ஊடுருவ முயன்றதை வீரர்கள் கண்டறிந்தனர்.

எல்லைப் பாதுகாப்பு வேலியைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் நுழைந்த அந்த நபரை இந்திய ராணுவத்தினர் உடனடியாகச் சூழ்ந்து பிடித்துத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர் பாகிஸ்தானின் பக்தூன் பகுதியைச் சேர்ந்த பாஜியா ஜடா கான் என்பவரின் மகன் ரயீஸ் கான் என்பது தெரியவந்துள்ளது. முறையான ஆவணங்கள் ஏதுமின்றி அவர் எல்லை தாண்டியதால் பாதுகாப்புப் படையினர் அவரை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் எதற்காகப் பாதுகாப்பு மிகுந்த இந்திய எல்லைப் பகுதியைத் தாண்டினார் மற்றும் இங்குள்ள யாருடனாவது அவருக்குத் தொடர்பு உள்ளதா என்ற கோணங்களில் விசாரணை நீடிக்கிறது. மேலும் அவருக்கு ஏதேனும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் ராணுவ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். எல்லையில் பிடிபட்ட இந்த பாகிஸ்தான் நபரால் அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ராணுவத்தினர் தங்களது கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.