பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டத்தில் திடீர் மாற்றம்... மத்திய அரசு புதிய உத்தரவு வெளியீடு!
மத்திய அரசு பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தில் மிக முக்கியமான சட்டத் திருத்தங்களைச் செய்ய முடிவெடுத்துள்ளது. காலதாமதமாகச் செய்யப்படும் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பதிவு நடைமுறைகளில் கூடுதல் வெளிப்படைத்தன்மையையும் துல்லியத்தையும் உறுதி செய்ய இந்த புதிய சட்டத் திருத்தங்கள் பெரிதும் உதவும் எனக் கருதப்படுகிறது. மத்திய அரசின் இந்த புதிய வழிகாட்டுதல்கள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
புதிய நடைமுறைகளின்படி, ஒரு குழந்தைப் பிறந்து 2 ஆண்டுகளுக்குள் பிறப்பைப் பதிவு செய்யத் தவறினால் பதிவு செய்வது எளிதான காரியமல்ல. 2 ஆண்டுகள் கடந்த பின்னர் மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆட்சியரிடம் அதிகாரப்பூர்வமாக முறையீடு செய்து அனுமதி பெற்ற பின்னரே பதிவு செய்ய இயலும். உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து உயர் அதிகாரிகளின் விரிவான பரிசீலனைக்கு பிறகே பிறப்புச் சான்றிதழ் வழங் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அலட்சியமாகச் செயல்படாமல் குறித்த காலத்தில் பிறப்பைப் பதிவு செய்ய ஊக்குவிக்கவே இந்த இறுக்கமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஒருவரின் இறப்பு நிகழ்ந்து 2 ஆண்டுகளுக்குள் பதிவு செய்யத் தவறினால் நீதித்துறை நடுவரிடம் நேரடியாக முறையிட வேண்டும். நீதித்துறை நடுவர் மேற்கொள்ளும் விரிவான விசாரணைக்குப் பிறகு பிறப்பிக்கப்படும் அதிகாரப்பூர்வ உத்தரவைப் பெற்ற பின்னரே இறப்பைப் பதிவு செய்ய முடியும். போலியான பதிவுகள் மற்றும் சான்றிதழ் முறைகேடுகளை முற்றிலும் தடுக்கும் பொருட்டே நீதிமன்ற உத்தரவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
