வரதட்சணையை எதிர்த்த பேராசிரியை மகள்... கல்லூரிக்குள் புகுந்து கத்தியால் குத்திய தந்தை!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பேராசிரியையாகப் பணியாற்றி வரும் துர்கா என்பவருக்குத் திருமணம் செய்யப் பெற்றோர் ஏற்பாடு செய்து வந்தனர். திருமணப் பேச்சுவார்த்தையின் போது துர்காவின் தந்தை நாகேந்திரா, வருங்கால மருமகனிடம் 40 லட்சம் ரூபாய் வரதட்சணையாகக் கேட்டுள்ளார். தந்தையின் இந்தச் செயலை மகள் துர்கா கடுமையாக எதிர்த்ததுடன், வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்ய முடியாது எனக் கண்டிப்புடன் கூறியுள்ளார். இதனால் தந்தைக்கும் மகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் கடுமையான குடும்பத் தகராறு நிலவி வந்தது.

வரதட்சணை கேட்கக் கூடாது என்ற மகளின் உறுதியான நிலப்பாட்டால் ஆத்திரமடைந்த தந்தை நாகேந்திரா,அதிர்ச்சியான முடிவொன்றை எடுத்தார். மகள் பணியாற்றும் கல்லூரி வளாகத்திற்குள் நேரடியாகச் சென்ற அவர், அங்குத் துர்காவிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துத் துர்காவைக் கொடூரமாகக் குத்தியுள்ளார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த துர்காவைக் கண்டு கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.கல்லூரி வளாகத்தில் படுகாயமடைந்து கிடந்த துர்காவை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
