போலீஸ் தேர்வு எழுதிய தாய்... 8 மாத குழந்தையைத் தொட்டிலில் போட்டு தாலாட்டிய பெண் காவலர்கள்!

 
child

கர்நாடக மாநிலம் முழுவதும் நேற்று 3,991 போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு வரும் தேர்வர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், பெங்களூரு சி.கே.அச்சுக்கட்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணா லே-அவுட்டில் உள்ள ஒரு தேர்வு மையத்திற்குத் நேற்று காலையில் தேர்வு எழுதப் பெண் ஒருவர் வந்திருந்தார். அவர் தன்னுடன் 8 மாத குழந்தையையும் கொண்டு வந்திருந்த நிலையில், அவருடன் துணைக்கு யாரும் வரவில்லை.

தேர்வு மையத்திற்குள் அவர் செல்ல இருந்த சந்தர்ப்பத்தில் அவரின் 8 மாத குழந்தை திடீரென்று அழத் தொடங்கியது. உடனே தனது குழந்தையைத் தாய் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் குழந்தை அழுதபடியே இருந்ததைப் பார்த்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்கள் உடனடியாக உதவ முன்வந்தனர். தேர்வு மைய வளாகத்தில் சேலையால் தொட்டில் கட்டி குழந்தையைப் போட்டு அவர்கள் தாலாட்டினார்கள்.

பெண் காவலர்களின் இந்த மனிதநேயமிக்க செயலால் குழந்தை சமாதானமடைந்து உறங்கியது. தாயின் பதற்றத்தைப் போக்கித் தேர்வு எழுத உதவிய பெண் காவலர்களின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. தேர்வு முடிந்து வெளியே வந்த தாய், பெண் காவலர்களுக்குக் கண்ணீருடன் தனது நன்றியைத் தெரிவித்தார்.