#BREAKING: ஓடுதளத்தில் தரையிறங்கிய போது இந்திய விமானப்படை விமானம் வெடித்து விபத்து: 2 பேர் உயிரிழந்ததாக அச்சம்!

 
இந்திய விமானப்படை விமானம் வெடித்து விபத்து இந்திய விமானப்படை விமானம் வெடித்து விபத்து

அசாம் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று ஓடுதளத்தில் தரையிறங்கிய சில வினாடிகளிலேயே திடீரென வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளான சம்பவம் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள இந்திய விமானப்படையின் முக்கியத் தளம் ஒன்றில், வழக்கமான பயிற்சிப் பறப்பை முடித்துக் கொண்டு இந்த விமானம் தரை இறங்கியுள்ளது. ஓடுதளத்தைத் தொட்ட சில வினாடிகளிலேயே எதிர்பாராத விதமாக விமானம் திடீரென வெடித்து, வேகத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

விமானம் முழுவதும் அடுத்த சில நிமிடங்களில் கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்ததால், அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த விமானப்படையின் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்புக் குழுவினர், கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

விமானம்

விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் பயணித்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓடுதளத்தில் விமானம் மிக வேகமாக வெடித்ததால், அவர்கள் இருவரும் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற அவகாசம் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் விமானத்தில் பயணித்த இரண்டு விமானப் படை வீரர்களும் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என்று பலத்த அஞ்சப்படுகிறது. எனினும், அவர்களின் நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட விமானப்படை நிர்வாகம் தற்போதைக்கு மறுத்துள்ளது.

இந்த விபத்திற்கான துல்லியமான காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நேரிட்டதா அல்லது தரையிறங்கும் போது ஓடுதளத்தில் ஏற்பட்ட ஏதேனும் குறைபாடா என்ற கோணத்தில் இந்திய விமானப்படை உயர்மட்டக் குழு விசாரணைக்குஉத்தரவிட்டுள்ளது. விபத்து நடந்த விமானப்படை தளம் தற்போது முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்டு, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.