மாயமான சுகோய்-30 போர் விமானம் விழுந்து நொறுங்கியதாக இந்தியா விமானப்படை அறிவிப்பு!
அசாம் மாநிலத்தில் பயிற்சியின் போது மாயமான இந்திய விமானப்படையின் Su-30 MKI ரக போர் விமானம், ஜோர்ஹாட் அருகே விழுந்து நொறுங்கியதை விமானப்படை இன்று அதிகாலை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. நேற்று மாலை வழக்கமான பயிற்சிப் பயணத்திற்காக ஜோர்ஹாட் விமானப்படைத் தளத்திலிருந்து கிளம்பிய இந்த விமானம், சிறிது நேரத்திலேயே ரேடார் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது.
ஜோர்ஹாட் நகரில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள கர்பி ஆங்லாங் மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. நேற்று இரவு 7:42 மணிக்கு தரைக்கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்பி ஆங்லாங் மாவட்டத்தின் நிலிப் பிளாக் அருகே வசிக்கும் பொதுமக்கள், இரவு 7 மணியளவில் ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்தனர். விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட போதிலும், விமானிகளின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அடர்ந்த வனப்பகுதி மற்றும் கரடுமுரடான மலைப்பாங்கான இடம் என்பதால், மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் கடும் சவால்கள் நீடிக்கின்றன. விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து கர்பி ஆங்லாங் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்திற்கான காரணம் தொழில்நுட்பக் கோளாறா அல்லது மோசமான வானிலையா என்பது குறித்து விசாரிக்க விமானப்படை உத்தரவிட்டுள்ளது. இந்திய விமானப்படையின் முதுகெலும்பாகக் கருதப்படும் சுகோய் ரக விமானங்கள் விபத்துக்குள்ளாவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
