இந்திய ராணுவ வீராங்கனைகள் சென்ட் பயன்படுத்த, லிப்ஸ்டிக், பொட்டு வைக்க தடை - புதிய விதிமுறைகள் வெளியீடு!
இந்தியப் பாதுகாப்புத் துறையைப் பலப்படுத்தும் நோக்கிலும், ராணுவ வீரர்களின் ஒழுக்க நெறிமுறைகளைச் சர்வதேசத் தரத்திற்குச் சீரமைக்கும் வகையிலும் இந்திய ராணுவம் தற்போது அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 'ராணுவ சீருடைகள்-2026' என்ற பெயரில் சற்றேறக்குறைய 174 பக்கங்கள் கொண்ட பிரம்மாண்ட புதிய சீருடை கையேடு ஒன்றை ராணுவத் தலைமை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த புதிய ஒழுங்குமுறை கையேட்டில், ஆங்கிலேயர்களின் காலனித்துவ காலத்து அடிமைத்தன நடைமுறைகள் மற்றும் ஆடம்பர கலாச்சாரங்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டு, இந்தியத் தட்பவெப்ப நிலைக்கு உகந்த நவீன குளிர்கால உடைகள் மற்றும் இந்தியாவின் பாரம்பரிய பெருமையை உணர்த்தும் 'பந்தி' ஜாக்கெட்டுகள் அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதே வேளையில், ராணுவத்தின் கண்ணியத்தைக் காக்கும் பொருட்டு ஆண் மற்றும் பெண் அதிகாரிகளுக்குப் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய விதிமுறைகளின்படி, ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களது உடம்பில் எவ்விதப் புதிய பச்சை குத்துவதற்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பணி நேரத்தில் அதீத வாசனை திரவியங்கள் பூசக் கூடாது என்றும், தங்களது மீசையின் அளவை 12 சென்டி மீட்டருக்கு மேல் எக்காரணம் கொண்டும் வளர்க்கக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகளின் உடைக் கட்டுப்பாடு மற்றும் ஒப்பனைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பெண் அதிகாரிகள் பணி நிமித்தமாக மற்றும் அதிகாரபூர்வ ராணுவ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது கையில்லாத 'ஸ்லீவ்லெஸ் குர்தா' போன்ற ஆடைகளை அணிய முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, லிப்ஸ்டிக் பூசுவதற்கும், நெற்றியில் பெரிய அளவிலான பொட்டு வைப்பதற்கும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தின் ஒழுக்கத்தையும், மிடுக்கான தோற்றத்தையும் உலகிற்குப் பறைசாற்றவே இந்த 174 பக்க புதிய சீருடை விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ராணுவ உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
