காஷ்மீர் எல்லையில் பறந்த டிரோன்கள் - இந்திய ராணுவம் தாக்குதல்!

 
டிரோன்கள் காஷ்மீர் போர்

ஜம்மு - காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இன்று அதிகாலை பாகிஸ்தான் டிரோன்கள் ஊடுருவ முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், இந்திய எல்லையிலும் அண்டை நாடான பாகிஸ்தான் தனது சீண்டல்களைத் தொடங்கியுள்ளது.

இன்று அதிகாலை 5:45 மணி முதல் 6:00 மணி வரை இந்த ஊடுருவல் முயற்சி நடந்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி, குறிப்பாக திக்வார் செக்டார் அருகே சுமார் 2 முதல் 3 சிறிய ரக குவாட்காப்டர் டிரோன்கள் இந்திய வான் எல்லைக்குள் நுழைய முயன்றன. எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள், வான்வெளியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கவனித்தனர்.

ராணுவம்

சுமார் 6:10 மணியளவில் ஒரு டிரோன் இந்திய எல்லைக்குள் சற்று ஆழமாக வந்தபோது, முன்னால் இருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் அதனைச் சுட்டு வீழ்த்த 12-க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கியால் சுட்டனர். ராணுவத்தின் இந்தத் திடீர் எதிர்த்தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் டிரோன்கள், உடனடியாகத் திசைமாறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தப்பிச் சென்றன.

கடந்த 3 நாட்களில் இது போன்ற ஊடுருவல் முயற்சி நடப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னதாகப் பிப்ரவரி 27-ஆம் தேதியும் இதே போன்ற டிரோன் நடமாட்டம் இப்பகுதியில் கண்டறியப்பட்டது. இந்த டிரோன்கள் மூலம் போதைப் பொருட்கள் அல்லது ஆயுதங்கள் ஏதேனும் இந்தியப் பகுதிக்குள் வீசப்பட்டதா என்பதை உறுதி செய்ய, ராணுவம் தற்போது அந்தப் பகுதி முழுவதும் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச் சூழல் மற்றும் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே தற்போது நிலவி வரும் நேரடி மோதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லை முழுவதும் ராணுவம் 'உயர் எச்சரிக்கை' நிலையில் வைக்கப்பட்டுள்ளது.