"உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்" - விஜய் குறித்து இந்தியக் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி உருக்கம்!

 
கிரிக்கெட் வருண் சக்ரவர்த்தி

முதலமைச்சர் விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படக் குழுவினருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ள இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, விஜய் குறித்து வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.

தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜய் உடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட வருண் சக்ரவர்த்தி, "'காதலுக்கு மரியாதை' திரைப்படம் வெளியான காலத்திலிருந்தே நான் உங்களின் தீவிர ரசிகனாக இருந்து வருகிறேன். என் சிறுவயது முதல் நீங்கள் என் வாழ்க்கையின் பிரிக்க முடியாத முக்கிய அங்கமாக விளங்கி வந்திருக்கிறீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யின் கலைப் பயணத்தின் நினைவுகளைப் பகிர்ந்த அவர், "திரையில் உங்களை இனிப் பார்க்க முடியாது என்பதை நினைக்கும் போது மிகவும் கடினமாக இருக்கிறது. உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுவேன்" என உணர்ச்சிப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார்.

விஜய்யின் திரைத்துறை வாழ்க்கையையும், ரசிகர்கள் மீது அவர் கொண்டுள்ள மாறாத அன்பையும் நினைவு கூர்ந்து வருண் சக்ரவர்த்தி வெளியிட்ட இந்த பதிவு, விஜய் ரசிகர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.