சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.36,800 கோடியாகச் சரிவு!
சுவிட்சர்லாந்து நாட்டின் மத்திய வங்கியான சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ள வருடாந்திர நிதிநிலை புள்ளிவிவரங்களின்படி, சுவிஸ் வங்கிகளில் இந்தியத் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வைத்துள்ள ஒட்டுமொத்த வைப்புத்தொகை கடந்த நிதியாண்டில் கணிசமாகக் குறைந்துள்ளது. எனினும், உலகளாவிய நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது.
சுவிஸ் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ நிதி அறிக்கையிl, சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் ஒட்டுமொத்த வைப்புத்தொகை பணம் கடந்த 2025-ஆம் ஆண்டில் 8 விழுக்காடு சரிவைச் சந்தித்து, 3.25 பில்லியன் சுவிஸ் பிராங்காக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.36,793 கோடி) குறைந்துள்ளது. ஒட்டுமொத்தத் தொகை குறைந்திருந்தாலும், தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நேரடி வாடிக்கையாளர் கணக்குகளில் உள்ள வைப்புத்தொகை 50 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. இது 524 மில்லியன் சுவிஸ் பிராங்காக (சுமார் ரூ.6,000 கோடி) அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் மொத்த முதலீட்டில் 16 விழுக்காடாகும்.

இந்தியர்களின் நிதி முதலீடுகள் வெவ்வேறு பிரிவுகளில் சந்தித்த மாற்றங்களின் விவரங்களின்படி, பிற உள்ளூர் கிளைகள் மற்றும் நிதி நிறுவனங்கள் (ஃபைனான்சியல் இன்ஸ்டிடியூஷன்ஸ்) வழியாக வைக்கப்பட்டிருந்த நிதி 15 விழுக்காடு குறைந்து 2.6 பில்லியன் சுவிஸ் பிராங்காக (சுமார் ரூ.25,480 கோடி) மாறியுள்ளது. இந்த பிரிவில் ஏற்பட்ட பெரிய சரிவே ஒட்டுமொத்த வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணமாகும்.
அறக்கட்டளைகள் மூலமாக உள்ள நிதி 55 விழுக்காடு மிகக் கடுமையாகக் குறைந்து 18.6 மில்லியன் சுவிஸ் பிராங்காகவும் (சுமார் ரூ.218.29 கோடி), பத்திரங்கள் மற்றும் இதர பத்திர வடிவங்களிலுள்ள (செக்யூரிட்டீஸ்) தொகை 105.7 மில்லியன் சுவிஸ் பிராங்காகவும் (சுமார் ரூ.1,241 கோடி) சரிந்துள்ளன.
சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டினர் வைத்துள்ள ஒட்டுமொத்தப் பணத்தின் பங்களிப்பு அடிப்படையில், சர்வதேச நாடுகளுக்கான தரவரிசைப் பட்டியலையும் சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டு 48-ஆவது இடத்தில் இருந்த நிலையில், 46-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இப்பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றன. இந்தியாவின் அண்டை நாடுகளான வங்காளதேசம் 81-ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 108-ஆவது இடத்திலும் உள்ளன. சுவிஸ் வங்கியிலுள்ள இந்தியர்களின் பணம் குறித்து எழும் அரசியல் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சர்வதேச நிதி நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

"சுவிஸ் மத்திய வங்கி வெளியிட்டுள்ள இந்தத் தரவுகள் அனைத்தும் வங்கிகள் முறைப்படி அரசுக்குத் தெரிவித்துள்ள அதிகாரப்பூர்வ வர்த்தகப் பணப் பரிமாற்றங்கள் ஆகும். எனவே, இவற்றை இந்தியாவில் விவாதிக்கப்படும் சட்டவிரோத 'கருப்பு பணம்' என்று நேரடியாகக் கருத முடியாது. மேலும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அல்லது மூன்றாம் நாடு நிறுவனங்களின் பெயர்களில் உள்ள கணக்கு விபரங்கள் இதில் சேர்க்கப்படவில்லை."
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள தானியங்கி தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், இந்த அதிகாரப்பூர்வக் கணக்குகளின் வரி விபரங்கள் அனைத்தும் இந்தியப் வருமான வரித்துறைக்கு முறைப்படி பகிர்ந்து கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
