அமெரிக்காவில் இந்திய டாக்டருக்கு ரூ.114 கோடி அபராதம் - போலி சிகிச்சையைக் காட்டிக்கொடுத்த ஊழியர்களுக்கு ரூ.27 கோடி வெகுமதி!
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் 'அட்வான்ஸ்டு யூராலஜி' என்ற பெயரில் மருத்துவ நிறுவனம் நடத்தி வந்த இந்திய வம்சாவளி மருத்துவர் ஜிதேஷ் படேல், மிகப் பெரிய அளவிலான மருத்துவ மோசடியில் ஈடுபட்டது ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது.
டாக்டர் ஜிதேஷ் படேல் மீது எழுந்த புகார்களை ஜார்ஜியா மாகாணப் போலீசார் மற்றும் உளவு அமைப்புகள் தீவிரமாக விசாரித்தன. அந்த விசாரணையில் அவர் செய்த தகிடுதத்தங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. நோயாளிகளுக்குத் தேவையே இல்லாத பல மருத்துவப் பரிசோதனைகளை வற்புறுத்திச் செய்துள்ளார். நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையே செய்யாமல், செய்ததாகப் பொய்க் கணக்குக் காட்டி அரசாங்கத்தின் காப்பீட்டுத் தொகையைப் பெற்றுள்ளார். சாதாரண சிகிச்சைகளை, மிக அதிகக் கட்டணம் கொண்ட உயர் ரகச் சிகிச்சைகளாகக் காட்டி மோசடி செய்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, ஜார்ஜியா மாகாண நீதிமன்றம் அவருக்கு 14 மில்லியன் டாலர்கள் (சுமார் ₹114 கோடி) அபராதம் விதித்து அதிரடித் தீர்ப்பளித்தது.
இந்த மோசடியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், துணிச்சலுடன் இதனை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த மருத்துவ ஊழியர்களுக்கு நீதிமன்றம் பாராட்டுத் தெரிவித்துள்ளது. மோசடியை ஆதாரங்களுடன் நிரூபிக்க உதவிய ஊழியர்களுக்கு, அந்த அபராதத் தொகையிலிருந்து 3 மில்லியன் டாலர்கள் (சுமார் ₹27 கோடி) வெகுமதியாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவத் துறையையே கறைப்படுத்தும் வகையில் செயல்பட்ட மருத்துவர் மீதான இந்த நடவடிக்கை, அமெரிக்காவில் உள்ள மற்ற இந்திய வம்சாவளி மருத்துவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
