இந்திய ஊழியர்களுக்கு பெரும் பாதிப்பு... அமேசான் நிறுவனத்தில் மீண்டும் ஆட்குறைப்பு!
உலகளாவிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனம், தனது ஸ்டோர்ஸ் பிரிவில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்யும் விதமாக மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
உலகளவில் அமெரிக்கா, இந்தியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள சுமார் 1,000 ஊழியர்கள் இந்த நடவடிக்கையால் வேலை இழந்துள்ளனர். அமேசான் நிறுவனத்தின் இந்தச் புதிய ஆட்குறைப்பால் இந்தியாவிலும் சில ஊழியர்களின் வேலை பறிபோயுள்ளது. இதுதொடர்பான தகவல்கள் நிறுவனத்தின் ஸ்லாக் உள்வழித் தளத்தில் ஊழியர்களால் பகிரப்பட்டு வருகின்றன. எனினும், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை நிறுவனம் வெளியிடவில்லை.

அமேசானின் முக்கிய இ-காமர்ஸ் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ஸ்டோர்ஸ் பிரிவு, வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனையாளர் ஆதரவு சேவைகள் போன்ற துறைகளில் இந்தப் பணியிடக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் முன்னுரிமைப் பணிகளை விரைவுபடுத்துவதற்கும், கட்டமைப்பை எளிமைப்படுத்துவதற்கும் இந்தத் கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பெருந்தொற்றுக் காலத்தில் அதிகப்படியான பணியாளர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில், நிறுவனத்தின் செலவீனங்களைக் குறைப்பதற்கும் கட்டமைப்பைச் சீரமைப்பதற்கும் அமேசான் தொடர்ச்சியான சிறிய மற்றும் பெரிய அளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
