அமெரிக்காவில் லாரி மோதி இந்திய இளம்பெண் உயிரிழப்பு - உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவரக் கோரிக்கை!
அமெரிக்காவில் கணவருடன் வசித்து வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பின்னால் வந்த லாரி கார் மீது மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் எதுலபரத்தைச் சேர்ந்த தரம் சீனிவாச ராவின் மகள் சுப்ரியா (31). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ரஞ்சித் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வரும் நிலையில், தம்பதியினர் அங்கு வசித்து வந்துள்ளனர். சுப்ரியா அங்கு ஒரு உணவகத்தையும் நடத்தி வந்தார். இவர்களுக்கு ஆதித்யா (3) என்ற மகனும் உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு உணவகத்தை மூடிவிட்டு சுப்ரியா தனது இந்தியத் தோழியுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் சுப்ரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் காரில் பயணித்த தோழி படுகாயமடைந்தார்.
வெளிநாட்டில் மகள் விபத்தில் உயிரிழந்த செய்தியைக் கேட்டு அவரது பெற்றோரும் குடும்பத்தினரும் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். சுப்ரியாவின் உடலை அமெரிக்காவில் இருந்து அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்குத் தெலுங்கானா அரசும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது தந்தை சீனிவாசன் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.
