‘காவலர்கள் பெயர் பேட்ஜ் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும்’ - உச்ச நீதிமன்றத்தில் ஐஐடி மாணவி மனு!
போராட்டங்கள் நடைபெறும் இடங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் காவல்துறையினர், தங்களின் பெயர் பொறித்த அடையாள அட்டை அல்லது 'பேட்ஜ்' அணிந்திருப்பதை கட்டாயமாக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகச் சென்ற மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்தத் தடியடிச் சம்பவத்தின் போது காயமடைந்த ஐஐடி மாணவி ஒருவர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

போராட்டங்களின் போது சீருடையில் இருக்கும் காவலர்கள் தங்களின் பெயர்களை மறைக்காமல், பெயர் பேட்ஜை தெளிவாக அணிந்திருப்பதைச் சட்டப்பூர்வமாகக் கட்டாயமாக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி தாக்கல் செய்துள்ள இந்த இடையீட்டு மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
