வெடித்த சர்ச்சை.... இந்தி மொழிக்கு மாறிய இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளம்!

 
வானிலை ஆய்வு மையம் வானிலை ஆய்வு மையம்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்திகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்படும் முறையில் அண்மையில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வானிலை முன்னறிவிப்புகளை வழங்கி வந்த சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இணையப் பக்கத்திலும் தற்போது மூன்றாவது மொழியாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் மாற்றம் தமிழக அரசியல் களத்தில் "இந்தி திணிப்பு" குறித்த புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நாடாளுமன்றக் குழுவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டிலிருந்தே இந்தி மொழிபெயர்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது அது இணையதளத்தில் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்காகத் தனியாக இந்தி மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருமொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழகத்தில், வானிலை போன்ற அத்தியாவசியத் தகவல்களை வழங்கும் தளத்தில் இந்தியைச் சேர்ப்பது அவசியமற்றது எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள வானிலை மைய இணையதளங்களில் அந்தந்த மாநில மொழிகளுடன் ஆங்கிலம் மட்டுமே உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் இந்தி சேர்க்கப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வியையும் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.