இந்தியர் மாயம்... ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல் மீதான தாக்குதல் - மத்திய அரசு கடும் கண்டனம்!

 
ஹார்முஸ் ஜலசந்தி கப்பல் தாக்குதல்

ஹார்முஸ் ஜலசந்தியில் பனாமா கொடியுடன் பயணித்த வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில், அதில் பணியாற்றிய இந்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும், இருவர் காயமடைந்துள்ள நிலையில், இச்சம்பவத்திற்கு மத்திய அரசு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

கடந்த நவம்பர் 16 அன்று ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில், பனாமா கொடியுடன் இயங்கிய 'எம்டி தாரா கேஸ்' எனும் எல்.பி.ஜி. டேங்கர் வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இக்கப்பலில் மொத்தம் 24 இந்தியர்கள் பணியாளர்களாக இருந்தனர். தாக்குதலுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், அவர்களில் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கசாப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஹார்மூஸ் ஹார்முஸ் ஈரான் படகு தீப்பற்றி தீப்பிடித்து கப்பல்

இத்தாக்குதலில் காயமடைந்த இரு இந்தியக் கப்பல் பணியாளர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயம், இந்தியரான ஒருவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை; அவர் மாயமாகியுள்ளார்.

வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு, சர்வதேச நீர்வழிகளில் எவ்விதத் தடையுமின்றி வணிகக் கப்பல் போக்குவரத்து நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஹார்முஸ் கப்பல் வணிக ஈரான்

ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம், ஓமன் நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளில் ஓமன் அரசாங்கம் வழங்கிய உடனடி உதவியையும் ஆதரவையும் இந்தியா வெகுவாகப் பாராட்டியுள்ளது. இப்பிராந்தியத்தில் தொடரும் இதுபோன்ற தாக்குதல்கள் கப்பல் பணியாளர்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.