நடுவானில் கத்திக்குத்து.. உயிரைப் பணயம் வைத்து 174 பேரை காப்பாற்றிய இந்திய பைலட்!

 
விமானம்

 

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவத்தின்போது, காயமடைந்த நிலையிலும் பயணிகளின் பாதுகாப்புக்காக செயல்பட்ட இந்திய பைலட் கேப்டன் ஸ்மித் மச்சார் (Smit Machchhar) பாராட்டுகளை குவித்து வருகிறார்.ஃப்ளைதுபாய் நிறுவனத்தின் FZ1073 விமானம் புதன்கிழமை துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி புறப்பட்டது. விமானத்தில் 174 பயணிகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, காக்பிட்டில் பைலட்டுகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.காயமடைந்த நிலையிலும் ஸ்மித் மச்சார் காக்பிட் கதவை திறக்க முடிந்ததாகவும், இதன் மூலம் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்ளே சென்று தாக்குதல் நடத்தியவரை கட்டுப்படுத்த உதவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் நகருக்கு திருப்பி விடப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

தற்போது காயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார் தபூக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்பத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியதாகவும், இந்திய தூதரக அதிகாரிகள் தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, “கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ” என்று பாராட்டியதுடன், அவரது துணிச்சலால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும், “இந்தியா அவரைப் பற்றி பெருமை கொள்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவும் கேப்டன் ஸ்மித் மச்சாரை பாராட்டியுள்ளார். காக்பிட்டில் அவர் காட்டிய அசாதாரண துணிச்சலும், உடனடி முடிவெடுக்கும் திறனும் விமானத்தில் இருந்த அனைவரின் உயிரையும் காப்பாற்ற உதவியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.விமானத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலுக்கு இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.