ரயில் பயணிகளுக்கு புதிய மாற்றம் வருமா? RAC முறையை ரத்து செய்ய ரயில்வே திட்டம்!

 
எக்ஸ்பிரஸ் ரயில்

 

ரயில்களில் பாதிப் படுக்கை வசதியில் பயணம் செய்யும் RAC பயணச்சீட்டு முறையை ரத்து செய்வது அல்லது மாற்றியமைப்பது குறித்து இந்திய ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

ரயில்களில் அனைத்து படுக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டால், கூடுதல் பயணிகளுக்கு RAC (Reservation Against Cancellation) முறையில் இடம் ஒதுக்கப்படுகிறது. இதன்படி, ஒரே கீழ்ப்படுக்கை இரண்டு பயணிகளுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது. இருவரும் அமர்ந்து பயணம் செய்ய முடியும் என்றாலும், படுத்து உறங்குவதற்கு தனித்தனி படுக்கை வசதி கிடைப்பதில்லை.

ரயில் எக்ஸ்பிரஸ்

ஆனால், இவ்வாறு பாதிப் படுக்கையை மட்டுமே பயன்படுத்தும் இரு பயணிகளிடமும் முழுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுக்கணக்குக் குழு அறிக்கையிலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. RAC நிலையில் தொடரும் பயணிகளுக்கு முழுக் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது என்றும், அவர்களுக்கு கட்டணத்தில் ஒரு பகுதியைத் திருப்பி வழங்கும் நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது.

ரயில்

இதற்கிடையே, வந்தே பாரத் ஸ்லீப்பர், அம்ரித் பாரத் உள்ளிட்ட சில ரயில்களில் RAC மற்றும் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகள் வழங்கப்படுவதில்லை. இந்தச் சூழலில், தற்போதைய RAC முறையைத் தொடர்வதா அல்லது மாற்றுவது என்பதைக் குறித்து ரயில்வே ஆய்வு செய்து வருகிறது.எனினும், RAC முறையை ரத்து செய்வது தொடர்பாக இறுதி முடிவு அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.