ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்த தடை!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச வர்த்தகத்தில் முக்கியப் பாதையாகத் திகழும் ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, இந்த நீர்வழிப் பாதை வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, கப்பல் போக்குவரத்துக்கான தலைமை இயக்குநரகம் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் இதற்கான அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை, ஹார்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடாப் பகுதி வழியாகப் பயணிக்கும் கப்பல்களில் இந்தியக் கடல்சார் பணியாளர்களை ஆள்சேர்ப்பு முகமைகளும், கப்பல் உரிமையாளர்களும் பணியமர்த்தக் கூடாது என்று கண்டிப்பான முன்னெச்சரிக்கை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய நாட்களில் இந்த நீரிணைப் பகுதியில் நடந்த அடுத்தடுத்த கொடூரத் தாக்குதல்களே இந்தியாவின் இந்த அதிரடி முடிவுக்கு முக்கியக் காரணமாகும். கடந்த ஜூலை 12 அன்று, சைப்ரஸ் நாட்டுக்குச் சொந்தமான 'ஜி.எப்.எஸ். கேலக்ஸி' என்ற கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், கப்பலில் இருந்தவர்கள் கடலில் குதித்தனர். இதில் மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த ஹெராம் கர்மார்கர் (30) என்ற இந்திய மாலுமி கடலில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டார்.
நேற்று முன்தினம் ஓமன் கடற்பகுதியில் இரண்டு அமீரகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலும் மற்றொரு இந்திய மாலுமி பரிதாபமாக உயிரிழந்தார். உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கைத் தாங்கிச் செல்லும் இந்த மிக முக்கிய நீர்வழிப் பாதை தற்போது வணிகக் கப்பல்களுக்கு முற்றிலும் பாதுகாப்பற்றதாக மாறிவிட்டதாகச் சர்வதேச கடல்சார் அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக அளவில் மாலுமிகளை வழங்கும் நாடுகளில் பிலிப்பைன்ஸிற்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது பெரிய நாடாகும். சர்வதேச வர்த்தகக் கப்பல்களில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாலுமிகள் பணிபுரிந்து வருகின்றனர். ஏற்கனவே முதலிடத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் தனது நாட்டு மாலுமிகளுக்குத் தடை விதித்துள்ள நிலையில், தற்பொழுது இந்தியாவும் இந்தத் தடையை அமல்படுத்தியுள்ளதால் சர்வதேச கப்பல் போக்குவரத்துத் துறையில் கடும் பணியாளர் தற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
மாறிவரும் இந்த ஆபத்தான பாதுகாப்புச் சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ள கடல்சார் நிர்வாக இயக்குநரகம், பாரசீக வளைகுடாப் பகுதியில் இந்தியக் கப்பல்களின் பாதுகாப்புக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், அவசரக் காலங்களில் MMDAC போன்ற தகவல் தொடர்பு மையங்களை உடனடியாகத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.
