ஓமன் கடல் பகுதியில் இந்திய கப்பல் மீது தாக்குதல்... இந்தியா கடும் கண்டனம்!
மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், ஓமன் கடல் பகுதியில் சென்ற இந்திய வர்த்தக கப்பல் இலக்கு வைக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓமன் கடல் பகுதியில் இந்தியக் கொடி ஏந்திய வர்த்தக கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, அதன் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலானது சர்வதேச கடல் வழித்தடத்தின் பாதுகாப்பு குறித்துப் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு இந்திய அரசு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இந்தியக் கப்பல் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சர்வதேச நீர்நிலைகளில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டியது மிக அவசியம் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்கனவே உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியக் கப்பல் மீதான இந்தத் தாக்குதல் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
