என்ஜின் கோளாறால் கடலில் மூழ்கிய இந்தியக் கப்பல்... அமெரிக்கப் படை உதவியுடன் 14 இந்திய மாலுமிகள் மீட்பு!

 
ஓமன் இந்திய கப்பல் ஓமன் இந்திய கப்பல்

சர்வதேச கடல் வணிகப் பாதையான ஓமன் நாட்டின் பிரதான கடல் எல்லைப் பகுதியில், இந்தியாவிற்குச் சொந்தமான 'விராட் 1' என்ற பிரம்மாண்ட சரக்குக் கப்பல், டன் கணக்கிலான வணிகப் பொருட்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாகக் கப்பலின் பிரதான என்ஜின் அறையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, ஒட்டுமொத்த என்ஜின் செயல்பாடும் நடுக்கடலில் முடங்கியது.

என்ஜின் பழுதான அடுத்த சில நிமிடங்களிலேயே, ராட்சத அலைகளின் தாக்கத்தால் கப்பலின் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, கடல் நீர் அதிவேகமாக உள்ளே புகத் தொடங்கியது. இதனால் நிலைதடுமாறிய 'விராட் 1' கப்பல், மெல்ல மெல்ல நடுக்கடலில் மூழ்கத் தொடங்கியது. தங்களது உயிர் ஆபத்தில் இருப்பதை உணர்ந்த கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளும் உடனடியாகச் சர்வதேச அவசரக் கட்டுப்பாட்டு அறைக்கு 'எஸ்.ஓ.எஸ்' அவசர ஆபத்துக் கால எச்சரிக்கை விடுத்தனர்.

ஹார்முஸ் ஈரான் கப்பல்

இந்த அவசரத் தகவலைப் பெற்றதும், அரபிக் கடல் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன கடற்படைப் போர்க்கப்பல்கள் மற்றும் அந்தப் பாதையில் சென்று கொண்டிருந்த இதர சர்வதேச வணிகக் கப்பல்கள் போர்க்கால அடிப்படையில் சம்பவ இடத்திற்கு மின்னல் வேகத்தில் விரைந்து வந்தன.

அமெரிக்க ராணுவ வீரர்களின் துரிதமான கூட்டு மீட்பு நடவடிக்கையின் காரணமாக, கடலில் மூழ்கிக் கொண்டிருந்த 'விராட் 1' கப்பலில் இருந்து 14 இந்திய மாலுமிகளும் எவ்வித உயிர்ச்சேதமுமின்றி அதிர்ஷ்டவசமாகப் பத்திரமாக மீட்கப்பட்டு, அமெரிக்கப் போர்க்கப்பலுக்கு அவசரமாக மாற்றப்பட்டனர். அவர்களுக்கு தற்போது முதலுதவி மற்றும் உணவுகள் வழங்கப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கப்பல் அமெரிக்கா தாக்குதல்

நடுக்கடலில் இந்தியக் கப்பல் மூழ்கிய இந்த சம்பவம் குறித்து, சர்வதேசக் கடல்சார் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, என்ஜின் கோளாறுக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.