நாசா விண்கலத்தில் விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி வீரர்; 8 மாதங்கள் தங்கி ஆய்வு!

 
நாசா அனில் மேனன்

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் புதிய விண்வெளி வீரர்கள் குழுவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவசரச் சிகிச்சை மருத்துவ நிபுணரான டாக்டர் அனில் மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாசாவின் இந்த விண்வெளிப் பயணத் திட்டத்தின் கீழ் உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 3 விண்வெளி வீரர்களில் அனில் மேனனும் ஒருவராவார்.  வருகிற 14-ம் தேதி கஜகஸ்தான் நாட்டில் உள்ள புகழ்பெற்ற பைகானூர் ஏவுதளத்திலிருந்து  சோயுஸ் விண்கலம் மூலம் அனில் மேனன் உள்ளிட்ட வீரர்கள் குழு விண்வெளிக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளது.

8 மாதங்கள் தங்கி ஆய்வு: சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றடையும் இந்த வீரர்கள் குழு, அங்குக் குடியேறி சுமார் 8 மாதங்கள் தங்கியிருந்து பல்வேறு முக்கிய அறிவியல் பரிசோதனைகள், மனித உடலியல் மாற்றங்கள் மற்றும் விண்வெளி மருத்துவத் துற சார்ந்த  ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

டாக்டர் அனில் மேனன் விண்வெளி மருத்துவத் துறையில் மிக நீண்ட அனுபவம் கொண்டவர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதல் மனித விண்வெளிப் பயணங்களின் போது விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் முதன்மை மருத்துவ இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாசாவின் விண்வெளி வீரர் பயிற்சிப் பிரிவில் இணைந்து அனைத்துக் கடுமையான பயிற்சிகளையும் வெற்றிகரமாக முடித்துள்ள அனில் மேனன், விண்வெளி நிலையப் பயணத்திற்கு முழுத் தகுதி பெற்றுள்ளார். அவசரச் சிகிச்சை மருத்துவத்தில் இவருக்கு இருக்கும் அனுபவம், விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கியிருக்கும் வீரர்களின் அவசர மருத்துவத் தேவைகளுக்குப் பெரிதும் உதவும் என நாசா தனது அறிக்கையில் பாராட்டியுள்ளது.

இந்திய வம்சாவளி வீரர் ஒருவர் நாசா விண்கலம் மூலம் விண்வெளிக்குச் செல்லவுள்ளதை அடுத்து, இந்தியாவின் இஸ்ரோ  விஞ்ஞானிகள் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மைய அதிகாரிகள் இந்த விண்வெளிப் பயணத் தரவுகளைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.