கலிபோர்னியாவில் தனியாக மலையேறச் சென்ற இந்திய வம்சாவளி மாணவர் பலி!

 
இந்திய மாணவர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிக் பைன் லேக்ஸ் மலைப்பகுதிக்குத் தனியாக மலையேற்றப் பயணம் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் விக்ரம் முபாயி (26) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியல் துறையில் பி.எச்.டி படித்து வந்த விக்ரம் முபாயி, மலையேற்றம் மற்றும் சாகசப் பயணங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி சியரா நெவாடாவில் உள்ள பிக் பைன் லேக்ஸ் பகுதியில் தனியாக மலையேற்றத்தில் ஈடுபட்டார். அன்று இரவு 8:30 மணியளவில் தனது ஜி.பி.எஸ் இருப்பிடத்தைக் குடும்பத்தினருக்கு அனுப்பிய பிறகு, அவரிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை.

விக்ரம் மாயமானது குறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ஹெலிகாப்டர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் மீட்புக் குழுவினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரண்டு நாட்கள் தேடுதலுக்குப் பிறகு, அங்குள்ள ஏரி ஒன்றில் விக்ரம் முபாயியின் உடல் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டது.

அவர் மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துப் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சதித்திட்டம் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.