அமெரிக்க கடற்படையில் 300 வீரர்களை வழிநடத்தும் இந்திய வம்சாவளி மாணவி ரித்தி சவுகான்!

 
அமெரிக்க கடற்படை இந்திய வம்சாவளி மாணவி ரித்தி சவுகான்

அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ரித்தி சவுகான், அமெரிக்க கடற்படையின் இளைஞர் பிரிவில் உயரிய பொறுப்பை ஏற்று சர்வதேச அளவில் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். சிறுவயது முதலே ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையில் தீவிர ஆர்வம் காட்டி வந்த இவர், அமெரிக்க கடற்படையின் இளைஞர் அமைப்பான 'சீ கேடட்' பிரிவில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.

ரித்தி சவுகானின் கடின உழைப்பு, தலைசிறந்த தலைமைப் பண்பு மற்றும் கடமை உணர்வைப் பாராட்டும் வகையில், அமெரிக்க கடற்படை நிர்வாகம் அவருக்கு மிக முக்கியப் பொறுப்பை அளித்துக் கெளரவித்துள்ளது. பொதுவாக அனுபவமிக்க அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் 'ரெஜிமென்டல் கமாண்டர்' எனும் உயரிய பொறுப்பு ரித்தி சவுகானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 300 கடற்படை வீரர்களை வழிநடத்தும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.

இந்தப் பிரிவில் உள்ள வீரர்களுக்குப் பயிற்சிகளை வழங்கி வழிநடத்துவது, ராணுவ ஒழுக்கக் கட்டுப்பாடுகளைக் கண்காணிப்பது மற்றும் அணிவகுப்புகளை முன்நின்று தலைமை தாங்குவது ஆகியவை இவரது முக்கியப் பொறுப்புகளாகும்.

உலக வல்லரசு நாடான அமெரிக்காவின் கடற்படை அமைப்பில், இளம் வயதிலேயே ஒரு இந்திய வம்சாவளிப் பெண் இத்தகைய பெரும் பொறுப்பை அடைந்திருப்பது அமெரிக்க வாழ் இந்தியர்களிடையேயும், இந்திய அளவிலும் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.