இந்தியாவுக்கு அடுத்த அதிர்ச்சி... பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதித்து ரஷ்யா உத்தரவு!
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் மற்றும் சர்வதேச எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, தனது நாட்டின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும், விலை உயர்வைத் தடுக்கவும் பெட்ரோல் ஏற்றுமதிக்கு 4 மாதத் தடையை ரஷ்யப் பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
ஈரானின் கடல்வழிப் பாதை முடக்கத்தால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் விவசாயப் பருவகாலம் தொடங்க உள்ளதாலும், சுத்திகரிப்பு நிலையங்களின் பராமரிப்புப் பணிகளாலும் உள்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை ஏப்ரல் 1, 2026 முதல் தொடங்கி அடுத்த 4 மாதங்களுக்கு (ஜூலை 31 வரை) அமலில் இருக்கும்.

ரஷ்யாவின் இந்த அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளுக்குப் பெரும் கவலையை அளித்துள்ள போதிலும், இந்தியாவுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அடுத்த 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன.
சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் விநியோகத்தில் எவ்விதத் தட்டுப்பாடும் ஏற்படாது என்று மத்திய அரசு பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 மத்திய அரசு குறைத்துள்ளதால், சர்வதேச விலை உயர்வின் தாக்கம் சாமானிய மக்களைப் பாதிக்காமல் தடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் இந்த ஏற்றுமதித் தடையிலிருந்து யூரேசியப் பொருளாதார ஒன்றிய நாடுகள் (Eurasian Economic Union), மங்கோலியா மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்ற நட்பு நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
