இந்திய மோசமான ஆட்டம்.. 3ஆவது டெஸ்டை எளிதாக வென்ற ஆஸ்திரேலியா.. உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி !

 
இந்தியா- ஆஸ்திரேலியா

கவாஸ்கா்-பார்டா் கோப்பைக்கான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. முதலிரண்டு டெஸ்ட்களில் வெற்றி பெற்று 2-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் இந்தூரில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 109 ரன்களுக்கு சுருண்டது. அதேபோல் அஸ்வின்- ஜடேஜா சுழலில் சுருண்டு ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 88 ரன்கள் முன்னிலை பெற்றது. உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்தார்.

இந்தியா- ஆஸ்திரேலியா

இந்திய தரப்பில் அற்புதமாக பந்துவீசிய ஸ்பின்னா்கள் ரவீந்திர ஜடேஜா 4-76, அஸ்வின் ரவிச்சந்திரன் 3-44, உமேஷ் யாதவ் 3-12 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.
இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இந்திய அணி முதல் 16 ஓவா்களில் வெறும் 30 ரன்களையே சோ்த்தது. ரோஹித் சா்மா 12, கில் 5, விராட் கோலி 13, ரவீந்திர ஜடேஜா 7, ஷ்ரேயஸ் ஐயா் 26, ஸ்ரீகா் பரத் 3, அஸ்வின் 16, உமேஷ் யாதவ் 0, சிராஜ் 0 என சொற்ப ரன்களுடன் நடையைக் கட்டினா்.
நிலைத்து நின்று ஆடக் கூடிய சேதேஸ்வா் புஜாரா மட்டுமே 142 பந்துகளில் 1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 59 ரன்களுடன் அரைசதம் விளாசி அவுட்டானார். முடிவில் ஆஸ்திரேலியா அணி 3-வது டெஸ்டில் வெற்றி பெற 76 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இன்று ஆட்டம் தொடங்கியவுடன் முதல் ஓவரிலேயே கவாஜாவின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். அதன்பிறகு ஹெட்டும் லபுஷேனும் பொறுப்புடன் விளையாடினர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி, 18.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து அபார வெற்றியை அடைந்தது. ஹெட் 49, லபுஷேன் 28 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்த டெஸ்டில் மொத்தமாக 11 விக்கெட்டுகள் எடுத்த லயன், ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 

இந்தியா- ஆஸ்திரேலியா

 3ஆவது டெஸ்டை வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது. டெஸ்ட் தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட், ஆமதாபாத்தில் மார்ச் 9 ஆம் தேதி தொடங்குகிறது. 

From around the web